dhoni, kohli pt web
கிரிக்கெட்

Brand Value | ஒரே கோப்பையில் கிடைத்த உச்சம்.. CSKவை விஞ்சி முதலிடத்திற்கு முன்னேறிய RCB!

Houlihan Lokey வெளியிட்ட ஆய்வுப்படி, 2025ஆம் ஆண்டில் ஐபிஎல் வணிக மதிப்பு ₹1.56 டிரில்லியனாக உயர்ந்தது. RCB $269M மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது

Sports Desk

Houlihan Lokeyயின் சமீபத்திய ஆய்வின்படி, ஐபிஎல் தொடரின் மொத்த வணிக மதிப்பு ஆண்டுக்காண்டு 12.9% அதிகரித்து ₹1.56 டிரில்லியன் ஆக அதிகரித்திருக்கிறது. brand value அடிப்படையிலான அணிகளின் தரவரிசையில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்திருக்கிறது.

IPL

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அணிகளின் பிராண்டு மதிப்பீடு தரவரிசை மற்றும் ஐபிஎல்லின் வணிக மதிப்பீட்டை Houlihan Lokey நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு அதாவது business value ஆண்டுக்காண்டு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டு ₹1.56 டிரில்லியன் எனும் நிலையை எட்டியிருக்கிறது. இதன்மூலம், உலகளவில் நடத்தப்படும் மதிப்புமிக்க விளையாட்டுகளில் முதலிடம் வகிக்கும் தனது இடத்தினை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் எனும் தனிப்பட்ட பிராண்டு மதிப்பும் 13.8% உயர்ந்து $3.9 பில்லியன் (₹32,721 கோடி) ஆகியுள்ளது.

இதற்குக் காரணமாகக் கூறப்படுவது, BCCI தனது நான்கு துணை ஸ்பான்சர் இடங்களை My11Circle, Angel One, RuPay, CEAT போன்ற நான்கு நிறுவனங்களுக்கு ரூ.1,485 கோடியில் கொடுத்திருக்கிறது. ஐபிஎல்லின் தலைமை ஸ்பான்சராக 2028 வரை ஒப்பந்தத்தை நீட்டித்துள்ள டாடா குழுமம், 5 ஆண்டு ஒப்பந்தத்தின் மதிப்பாக ரூ. 2,500 கோடியை கொடுத்திருக்கிறது. இதுவும் ஐபிஎல் வணிக மதிப்பில் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

அணிகளுக்கான brand valueக்களின் அடிப்படையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) $269 மில்லியனுடன் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு RCB-யின் மதிப்பு $227 மில்லியனாக இருந்தது. நடப்பாண்டில் ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அவர்களது Brand value மதிப்பு அதிகரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி $242 மில்லியனுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மும்பை அணி நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நடப்பு சீசனில் மிகவும் மோசமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. இதன் எதிரொலியாக Brand value மதிப்பிலும் சரிந்திருக்கிறது. $235 மில்லியனுடன் மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Brand value அடிப்படையில் அணிகள்

1. பெங்களூரு - ரூ.2,309.20 கோடி ($269M)

2. மும்பை - ரூ.2,077.24 கோடி ($242M)

3. சென்னை - ரூ.2,017.15 கோடி ($235M)

4. கொல்கத்தா - ரூ.1,948.64 கோடி ($227M)

5. ஹைதராபாத் - ரூ.1,321.78 கோடி ($154M)

6. டெல்லி - ரூ.1,304.39 கோடி ($152M)

7. ராஜஸ்தான் - ரூ.1,252.90 கோடி ($146M)

8. குஜராத் - ரூ.1,218.36 கோடி ($142M)

9. பஞ்சாப் - ரூ.1,209.75 கோடி ($141M)

10. லக்னோ - ரூ.1,046.73 கோடி ($122M)