பிரேசில் தலைநகரில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு... பிரேசில் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
Hajira
பிரேசிலின் மிக உயரிய குடிமை விருதான "கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்" (Grand Collar of the National Order of the Southern Cross) விருதை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவால் வழங்கினார். விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர், இது 140 கோடி இந்தியர்களுக்கான பெருமையான தருணம் என நெகிழ்ச்சியடைந்தார்.
பிரேசில் அதிபரின் அழைப்பை ஏற்றி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணப்பட்டார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பின்போது இருநாடுகளும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, உலக அமைதியை ஏற்படுத்த உறுதி பூண்டன. அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அடுத்த பத்தாண்டுகளுக்கான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நாட்டின் பாதுகாப்பு, உணவு, ஊட்டச்சத்து, எரிசக்தி, காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் பிரதமருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜி20, BRICS போன்ற முக்கிய உலகளாவிய மாநாடுகளில் இந்தியா-பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தியதில் பிரதமர் மோடியின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது குறித்து பேசிய பிரதமர் "பிரேசிலின் மிக உயர்ந்த தேசிய விருதை அந்நாட்டு அதிபரின் கையால் பெற்றது எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமை மற்றும் உணர்ச்சிகரமான தருணம். மேலும், இந்த விருது தனக்குக் கிடைத்த ஒரு தனிப்பட்ட கெளரவம் என்பதைத் தாண்டி, இந்தியா - பிரேசில் உறவுகளின் வலிமையையும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நெருங்கிய பிணைப்பையும் பிரதிபலிக்கிறது.” என்று பேசினார்.
இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,” இந்த விருது பிரேசில் மக்கள் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள வலுவான பாசத்தையும், நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது . எதிர்காலத்தில் நமது நட்பு இன்னும் புதிய வெற்றிகளை அடையட்டும் .” என்று பதிவிட்டுள்ளார்.
மே 2014இல் பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி தற்போது வரை வெளிநாட்டு அரசுகளால் 26 சர்வதேச விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.