ஆர்சிபி  ipl
கிரிக்கெட்

IPL 2026| முதல் போட்டியிலேயே கோப்பைக்காக ஆடிய ஆர்சிபி.. வெற்றிக்கு பின் கோலி பேசியது என்ன?

2026 ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது..

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடக்கப் போட்டியில், ஆர்சிபி அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. ஹசல்வுட், யஷ் தயாள் இல்லாத குறையை ஜாக்கப் டஃபி நிரப்பி 3 விக்கெட்டுகள் எடுத்தார். 202 ரன்களை துரத்தும் வேட்டையில் படிக்கல், கோலி, பட்டிதார் மிரட்டலாக விளையாட, 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆர்சிபி, நெட் ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து கோப்பை நோக்கி தயாராக இருப்பதை காட்டியது.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் மார்ச் 28ஆம் தேதியான நேற்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கியது. எப்போதும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல் தொடர், இந்தமுறை கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் தொடங்கப்பட்டது.

ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணி

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தங்களுடைய சொந்த மண்ணான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. கடந்தாண்டு ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது கூட்டநெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், இந்த முறை பெங்களூரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளை தவிர்த்தது பிசிசிஐ.

ஆர்சிபியின் மிரட்டல் பந்துவீச்சு..

பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஜோஷ் ஹசல்வுட், யஷ் தயாள் போன்ற பவுலர்கள் ஆர்சிபி அணியில் இல்லாததால் சன்ரைசர்ஸ் அணியின் கைகளே ஓங்கியிருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் ஹசல்வுட்டுக்கு பதிலாக களமிறங்கிய ஜாக்கப் டஃபி முதல் 3 ஓவரிலேயே அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார்.

ஜாக்கப் டஃபி

டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்த மோசமான ஃபார்மை அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடர்ந்தனர். அடுத்துவந்த நிதிஷ்குமார் ரெட்டியும் அவுட்டாக, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இஷான் கிஷன், SRH

மிரட்டல் ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷன் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடிக்க, கிளாசன் 2 பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசினார். ஆனால் இஷான் கிஷன் 80 ரன்னிலும், கிளாசன் 31 ரன்னிலும் வெளியேற மீண்டும் சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. இஷான் கிஷன், கிளாசன் இருவரையும் இரண்டு அபாரமான கேட்ச்கள் மூலம் வெளியேற்றினார் ஃபிலிப் சால்ட்.

ஃபிலிப் சால்ட்

எல்லோரும் நடையை கட்ட கடைசியாக வந்து சிக்சர்களை இடியாக இறக்கிய அனிகேத் வர்மா 18 பந்தில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 43 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களை எட்டியது சன்ரைசர்ஸ் அணி.

படிக்கல், கோலி மிரட்டல் ஆட்டம்..

202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 2 பவுண்டரிகள் அடித்த பிறகு விரைவாகவே வெளியேறினார். ஆனால் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். 26 பந்தில் 61 ரன்கள் அடித்த அவர் பவர்பிளேவிலேயே சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்தார்.

படிக்கல் அவுட்டாகும் வரை அவருடைய ஆட்டத்தை ரசித்த விராட் கோலி, அதற்கு பிறகு 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என அவருடைய சிறந்த ஃபார்மை வெளிக்கொண்டு வந்தார். அதிலும் இஷான் மலிங்காவிற்கு எதிராக அவரடித்த ஸ்ட்ரைட் சிக்சர், அவருடைய கிளாஸ் என்ன என்பதை மீண்டும் பறைசாற்றியது.

4வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்க 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. 4 ஓவரில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜாக்கப் டஃபி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கோப்பைக்காக விளையாடிய ஆர்சிபி..

ஜோஷ் ஹசல்வுட் இல்லை, யஷ் தயாள் இல்லை, ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது, இம்முறை ஆர்சிபி டாப் 4 லிஸ்ட்டில் வராது என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், ஹசல்வுட்டின் இடத்தை நிரப்பிய ஜாக்கப் டஃபி அந்த விமர்சனத்தை உடைத்தார். அதே நேரத்தில் பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கு எதிராகவும் பவுலிங் பிளானுடன் வந்திருந்த ஆர்சிபி அணி, எந்தளவு தயாராகி உள்ளது என்பது வெளிப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் போட்டியை வென்றபிறகு பேசிய விராட் கோலி, படிக்கல் அப்படி ஒரு ஆட்டத்தை ஆடியபிறகு, பட்டிதாரிடம் அடித்து ஆடுங்கள் நாம் 4 ஓவரை வெளியில் வைத்து முடித்தால் நமக்கு ரன்ரேட் கூடுதலாக கிடைக்கும் என்று கூறினேன் என வெளிப்படுத்தினார். அதன்படி பார்த்தால் ஆர்சிபி அணி முதல் போட்டியிலேயே கோப்பைக்காக களமிறங்கியது தெரிகிறது. தற்போது +2.907 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி, அடுத்த போட்டியில் ஏப்ரல் 5ஆம் தேதி சிஎஸ்கேவை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.