யாஷ் தயாள், ஸ்வேதா பண்டிர் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

பாலியல் தொடர்பாக 2 பெண்கள் புகார்.. காதலியை ரகசியமாக திருமணம் செய்த RCB வீரர்?

ஆர்.சி.பி. வீரரான யாஷ் தயாள், தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Prakash J

ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் ரீதியாக புகார் அளித்துள்ளனர்.

ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணியில் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண ஆசை காட்டி சுமார் 5 ஆண்டுகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார்.

யாஷ் தயாள்

அதன்பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல், கிரிக்கெட்டில் உதவுவதாகக் கூறி 2023ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு ஜாமீன் வழங்கி நிவாரணம் அளித்திருந்தது.

இந்த நிலையில், தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரான ஸ்வேதா பண்டிரை பிப்ரவரி 4, 2026 அன்று ஒரு நெருக்கமான விழாவில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருதரப்பினருக்கான உறவுகள் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. யாஷ் தயாளின் மனைவியான ஸ்வேதா பண்டிர் உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

தற்போது டெல்லியில் வசித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் 5,87,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் நீண்ட தொடர்பு உள்ளது. தனது திருமணம் குறித்து யாஷ் தயாள் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரையும் உள்ளடக்கிய ஒரு 'ரீல்ஸ்' வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 2025-ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கோப்பையை வென்ற RCB அணியில் இடம்பெற்றிருந்த தயாள், இந்த ஆண்டும் அத்தொடரில் மீண்டும் பங்கேற்கவுள்ளார்.