மேலும் ஒரு புகார்.. கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாய்ந்த போக்சோ வழக்கு.! நடந்தது என்ன?
ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணியில் யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு புதிய பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக தன்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் முதலில் யஷ் தயாளை மைனராக இருந்தபோது, அதாவது வெறும் 17 வயதில், ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது சந்தித்ததாகவும், தொழில் ஆலோசனை வழங்குவதாகக் கூறி, சீதாபுராவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு, தயாள் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், இந்தப் பழக்கம் தொடர்ந்து 2 ஆண்டுகள் இருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாஷ் தயாள் மீது, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடிப் புகார் தெரிவித்திருந்தார். அவர், முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல், ஐஜிஆர்எஸ் மூலம் புகார் அளித்திருந்தார். எனினும், அந்தக் குற்றச்சாட்டை யாஷ் தயாள் மறுத்திருந்தார். ஆனாலும், இந்த விஷயத்தை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரிலும், யாஷ் தயாள் மீது காசியாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த எஃப்ஐஆருக்கு எதிராக யாஷ் தயாள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரின் கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.