Ellyse Perry
Ellyse Perry X
கிரிக்கெட்

4 முறை தெறித்த ஸ்டம்புகள்.. 2 LBW! 6 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்த RCB வீராங்கனை எல்லிஸ் பெர்ரி!

Rishan Vengai

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி 23ம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது.

”ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ்” முதலிய 5 அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 20 லீக் போட்டிகளில் 18 போட்டிகள் முடிவுற்ற நிலையில் ”டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்” அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

kaur

மூன்றாவது இடத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக உபி வாரியர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.

mandhana

இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது ஆர்சிபி அணி. டாஸ் வென்ற ஸ்மிரிதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பான தொடக்கம் கொடுத்த மும்பை.. 6 விக்கெட் அள்ளி மிரட்டிய பெர்ரி!

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேரளா வீராங்கனை சஜனாவிற்கு தொடக்கவீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஜனா 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 30 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் இருந்த மேத்யூஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்ட 5 ஓவரில் 43 ரன்கள் எடுத்து சிறப்பாக தொடங்கியது மும்பை அணி.

sajana

எல்லிஸ் பெர்ரி வரும் வரை எல்லாமே மும்பை அணிக்கு சரியாகவே சென்றுகொண்டிருந்தது. மேத்யூஸை டெவின் வெளியேற்றி தொடங்கிவைக்க, பின்னர் பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி கொத்துகொத்தாக விக்கெட் வேட்டை நடத்தினார். 9வது ஓவரில் சஜனாவை போல்டாக்கி வெளியேற்றிய பெர்ரி, உடன் களத்திற்கு வந்த ஸ்கைவரையும் அதேஓவரில் வெளியேற்றி அனுப்பிவைத்தார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்து மும்பை அணி தடுமாறிய போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சரியான நேரத்தில் களத்திற்கு வந்தார். ஆனால் ஹர்மன்ப்ரீத்தை முதல் பந்திலேயே போல்டாக்கி கோல்டன் டக்கில் வெளியேற்றிய பெர்ரி, ஆட்டத்தை ஆர்சிபி அணியின் கைகளில் எடுத்துவந்தார். அடுத்தடுத்து அமன்ஜோத் கார், பூஜா வஸ்தராகரின் ஸ்டம்புகளை எல்லாம் தகர்த்த பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கிப்போட்டார்.

ellyse perry

113 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி இரண்டாவது குறைந்தபட்ச ரன்களை பதிவுசெய்தது. "4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய எல்லிஸ் பெர்ரி, மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்து வரலாறு படைத்தார்". 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் ஆர்சிபி அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்களுடன் விளையாடிவருகிறது. இன்னும் 10 ஓவர்களுக்கு இன்னும் 60 பந்துகளில் 55 ரன்கள் தேவையாக உள்ளது.