ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது.
இதற்கிடையே, இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. அது, தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி மதுபான நிறுவனமான டியாஜியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் (ஆண்கள்) மற்றும் டபிள்யூபிஎல் (பெண்கள்) அணிகளை நிர்வகித்து வருகிறது.
அந்த அணி உரிமையாளர்களான UKவை தளமாகக் கொண்ட மதுபான நிறுவனமான டியாஜியோ, மார்ச் 31, 2026க்குள் தனது உரிமையை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி, பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) தாக்கல் செய்த அறிக்கையில், டியாஜியோ நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அதில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) மீதான தனது முதலீட்டை மறுஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆர்சிபி அணி எங்களுக்கு ஒரு மதிப்புமிக்க மற்றும் முக்கியச் சொத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், எங்களின் முதன்மைத் தொழிலான மதுபான வர்த்தகத்திற்கு, கிரிக்கெட் வணிகம் ஒரு முக்கிய அங்கமாக (Core Business) இல்லை. எனவே, இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரவீன் சோமேஷ்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டியாஜியோ நிர்வாகத்துடன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால், டெல்லியைச் சேர்ந்த பலதுறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர் ஒருவரும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களைத் தவிர, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபத்தில், விளையாட்டுப் பிரிவு (ஆர்சிபி) மட்டும் 8.3% பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31-க்குள் ஆர்சிபி அணியை விற்பதன் மூலம் கிடைத்த லாபத்தை கணக்கில் காட்ட முடியும். எனவேதான் இந்த அவசர விற்பனை ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.