ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சீசனில் சின்னசாமியில் கேகேஆரிடம் அவமான தோல்வி கண்ட ஆர்சிபி, 18 ஆண்டுகள் கழித்தும் அதே மைதானத்தில் அதே நாளில் மீண்டும் தோல்வி கண்டது. ஃபிலிப் சால்ட் அதிரடி அரைசதம், ஆனால் மத்தியில் சரிந்த பேட்டிங் காரணமாக 175 ரன்களிலேயே நின்ற ஆர்சிபி, டெல்லியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போனது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கப்பட்ட போது சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான அன்றைய போட்டியில் ப்ரெண்டன் மெக்கல்லம் ருத்ரதாண்ட பேட்டிங்கை வெளிப்படுத்தி 13 சிக்சர்களை பறக்கவிட்டு தனியாளாக 158 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தா நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி வெறும் 82 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. அன்று சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடிய ஆர்சிபி, நேற்று 18 வருடங்களுக்கு பிறகு அதேநாளில் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் விளையாடியது.
இந்தநிலையில் நேற்று விளையாடிய போட்டியிலும் ஆர்சிபி அணி கடைசிப் பந்தில் தோல்வியை தழுவியது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. பகல்நேர ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாகவே தொடங்கினர். விராட் கோலி 19 ரன்னில் வெளியேறினாலும், மறுமுனையில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அதிரடி காட்டிய சால்ட் 63 ரன்கள் குவித்து அவுட்டானார்.
10 ஓவரில் கிட்டத்தட்ட 100 ரன்களை ஆர்சிபி எட்டியபிறகு எப்படியும் 210 ரன்கள் வரை அடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குபிறகு ஆடுகளம் மெதுதன்மையாக மாற அதை பயன்படுத்திக்கொண்ட டெல்லி அணி பவுலர்கள் அற்புதமான பந்துவீசினர். ஒருபக்கம் டெல்லி பவுலர்கள் சிறப்பாக பந்துவீச, மறுபக்கம் சீரான இடைவெளியில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளாக சரிய விட்டனர்.
கடைசிவரை நின்ற ஜிதேஷ் சர்மாவிற்கு பேட்டில் பந்தே படாத நிலையில் அவராலும் அணிக்கு உதவ முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை மட்டுமே ஆர்சிபியால் அடிக்க முடிந்தது.
176 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய டெல்லி அணிக்கு, முதல் 2 ஓவர்களை அபாரமாக பந்துவீசிய புவனேஷ்குமார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 18 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறினாலும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
டெல்லி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்பதை விட, ஆர்சிபி மெய்ன் பவுலரான ஜோஷ் ஹசல்வுட் மற்றும் கேம் சேஞ்சிங் பவுலரான சுயாஷ் ஷர்மா இருவருக்கும் மந்தமான நாளாகவே அமைந்தது. ராகுல் 57 ரன்களில் வெளியேறினாலும், அடுத்துவந்த அக்சர் பட்டேல் ஆர்சிபி அணியை செட்டிலாக விடாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார்.
கடைசியில் சிறப்பாக பந்துவீசிய ஆர்சிபி அணி இழுத்துப்பிடிக்க இறுதி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. களத்தில் இரண்டு ஃபினிசர்களான ஸ்டப்ஸ் மற்றும் மில்லர் இருக்க, முதல் 2 பந்துகளை சிறப்பாக வீசிய ரொமாரியோ ஷெபர்ட் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் அடுத்தடுத்த 2 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட டேவிட் மில்லர் டெல்லி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்தமுடிவுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி 8 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், டெல்லி 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் நீடிக்கின்றன.