நிதிஷ்குமார் ரெட்டி - ரவி சாஸ்திரி x
கிரிக்கெட்

‘கிரிக்கெட் வெறும் வார்த்தையல்ல.. எமோசன்!’ - நிதிஷ்ரெட்டி சதமடித்த போது கண்கலங்கிய ரவிசாஸ்திரி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சதமடித்து நிதிஷ் ரெட்டி காப்பாற்றிய பிறகு, வர்ணனைபெட்டியில் இருந்த ரவிசாஸ்திரி கண்ணீர் சிந்திய வீடியோ வைரலாகிவருகிறது.

Rishan Vengai

ஒருகாலத்தில் வீழ்த்தவே முடியாத வலுவான அணியாக இருந்த ஆஸ்திரேலியா அணி, பல்வேறு முக்கியமான தருணத்தில் இந்தியாவை அதளபாதாளத்தில் தள்ளியுள்ளது. எவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தபோதும், ஆஸ்திரேலியா அணியை முக்கியமான தொடர்களில் இந்திய அணியால் வீழ்த்தவே முடிந்ததில்லை.

ஆனால் அதையெல்லாம் தலைகீழாக மாற்றியிருக்கும் சமீபத்திய இந்திய அணி, கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

நிதிஷ்குமார் ரெட்டி

அப்படி இந்த முறையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், 4வது போட்டியில் சதமடித்த நிதிஷ்குமார் ரெட்டி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

அப்போது போட்டியை பார்த்த நிதிஷ்குமாரின் தந்தை, ரசிகர்கள் மட்டுமில்லாமல் வர்ணனைபெட்டியில் இருந்த முன்னாள் வீரர்களும் அதிகப்படியான உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டனர். அதிலும் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிதிஷ் ரெட்டியின் சதத்தின்போது கண்ணீர் சிந்திய காட்சிகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

கண்ணீர்விட்ட ரவிசாஸ்திரி..

164/5 என்ற மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரும் மீட்டு எடுத்துவந்தனர். சுந்தர் 50 ரன்னில் அவுட்டாகி வெளியேறினாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி 21 வயதில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளினார்.

கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் கைகள் ஓங்கிவிட்டது என்ற தருணத்திலிருந்து போட்டியை மீட்டுஎடுத்துவந்த நிதிஷ்குமார் சதத்தை பார்த்த அவருடைய தந்தை ஆனந்த கண்ணீர் வடித்த அதேநேரத்தில், வர்ணனைபெட்டியில் இருந்த ரவிசாஸ்திரியின் கண்களும் கண்ணீரில் மூழ்கியிருந்தன.

நிதிஷ் ரெட்டி சதமடித்த போது இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மற்றும் டிவி தொகுப்பாளர் ஜதின் சப்ரு ஆகியோர் வர்ணனை பெட்டியில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ரவி சாஸ்திரியின் கண்கள் ஈரமாகின, அந்த தருணம் குறித்து பேசிய ரவிசாஸ்திரி “இந்த நேரத்தில் நிதிஷின் தந்தை மட்டுமல்ல, போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து இந்திய ரசிகர்களுன் கண்களில் கண்ணீர் இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ரவிசாஸ்திரியின் இதே எமோஷனை, ரிஷப் பண்ட் தவறான ஷாட் மூலம் அவுட்டாகி வெளியேறும் போது கோவமாக சுனில் கவாஸ்கர் வெளிப்படுத்தியிருந்தார். இந்தபோட்டி எவ்வளவு முக்கியமானது, ஆஸ்திரேலியாவில் வெற்றி எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னாள் வீரர்கள் தங்கள் உணர்வுகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.