நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து வரலாற்று தோல்விக்கு தொடக்க உரை எழுதியது முதல் தற்போதைய 4வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லை டிராப் செய்தது வரை கேப்டன்சியில் தொடர்ந்து பல்வேறு மோசமான முடிவுகளை ரோகித் சர்மா எடுத்துவருகிறார்.
பும்ரா கேப்டன்சியில் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று மொமண்ட்டம் இந்தியாவிற்கு திரும்பிய பிறகு, அடுத்த போட்டியில் இருந்து ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக்கொண்டார். ஆனால் ரோகித் சர்மா தலைமையில் கடந்த 3 போட்டிகளாக இந்திய அணி வெற்றியை தொட முடியாமல் தடுமாறி வருகிறது.
அதற்கு வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக இருந்தாலும், ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் கையில் இல்லாத போட்டியை கூட விரட்டி வெற்றிபெறும் இந்திய அணி, தற்போது கையில் வாய்ப்புகள் இருந்தாலும் அதைக்கோட்டைவிட்டு தோல்வியை தழுவி வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் மோசமான முடிவுகள் குறித்து முன்னாள் இந்திய ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிங்க்பால் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப்பை எடுத்துவராமல் ஹர்சித் ரானாவை பயன்படுத்தியது, அதற்கடுத்த போட்டியில் ஹர்சித் ரானா டிராப் செய்யப்பட்டது, 4வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு வாசிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டுவந்தது, தொடக்க வீரராக தன்னை உயர்த்திக்கொண்டது, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 2 ஸ்பின்னர்களை எடுத்துவந்தது முதல் இந்திய அணித் தேர்வு, பவுலிங் ரொட்டேஷன், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கான பவுலிங் மேட்ச்சப் என அனைத்துவிதமான முடிவுகளிலும் தொடர்ந்து ரோகித்சர்மா சொதப்பிவருகிறார்.
முதல் நாள் ஆட்டம்முடிவில் 311 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்த போதிலும், இரண்டாவது நாள் ஆட்டத்தில் கடைசி 4 விக்கெட்டுகளுக்கு 163 ரன்களை இந்தியா விட்டுக்கொடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 474 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து விமர்சித்திருக்கும் சுனில் கவாஸ்கர், “40 ஓவர்களுக்கு பிறகு எதற்காக இரண்டு ஸ்பின்னர்கள் பந்துவீச வந்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. மெல்போர்னை பொறுத்தவரையில் நீங்கள் ஸ்பின்னர்களை முன்னதாகவே பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இரண்டாவது நாளை பொறுத்தவரையில் உங்களுக்கு முன்னதாக விக்கெட் தேவை, ஆனால் நீங்கள் முதல் ஓவரை பும்ராவிற்கு கொடுக்காமல் சிராஜுக்கு கொடுக்கிறீர்கள். சிராஜின் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது நீங்கள் அவரை சரியான இடத்திலும், சரியான விதத்திலும் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல ஸ்டார்க் பேட்டிங் செய்யும் போது உங்களுடைய ஃபீல்ட் செட் லாங்க் ஆன், லாங்க் ஆஃபில் இருக்கிறது. என்னவகையில் நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பது புரியவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
ரோகித் கேப்டன்சியை விமர்சித்த சுனில் கவாஸ்கர், “மிகவும் சாதாரண பந்துவீச்சு தாக்குதல். நீங்கள் ஒரு பவுன்சரை வீச வேண்டும் என்றால், நீங்கள் அதை ஹெல்மெட்டின் பேட்ஜை நோக்கி வீசவேண்டும், இடுப்பைச் சுற்றி அல்ல. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், மன்னிக்கவும். இந்த புதிய பந்து முழுவதும் வீணடிக்கப்பட்டது. ஆகாஷ் தீப் முழுவதும் வீணடித்துவிட்டார். அவர் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசுவதன் மூலம் புதிய பந்தை முழுமையாக வீணடித்தார்” என்று காட்டமாக கூறினார்.
எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், ரோகித் சர்மா அரைகுறை ஃபார்முடன் அணிக்குள் வந்து மொத்தமாக அணியை சீர்குலைத்துவிட்டார் என விமர்சித்தார்.