2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தங்கள் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்த ஆர்சிபிக்காக ஹசல்வுட் மற்றும் புதிய ஹீரோ ரசிக் சலாம் இணைந்து லக்னோவை 146 ரன்களுக்கு சுருக்கினர். பின்னர் விராட் கோலி 49 ரன்கள் குவித்து இலக்கை எளிதில் எட்டினார்.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல கடந்தமுறை இறுதிப்போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸும் இந்தமுறை கோப்பையை தட்டித்துக்கும் முயற்சியிலும், இன்னொரு பக்கம் சூர்யவன்ஷி என்ற இளம் புயலோடு ராஜஸ்தானும் அதிரடி காட்டிவருகின்றன.
இந்தசூழலில் நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ அணிக்கு எதிராக ஹசல்வுட் மற்றும் ரசிக் சலாம் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் ஒரு ஓவருக்கு 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்து ஹசல்வுட் அழுத்தம் போட, மறுபக்கம் ரசிக் சலாம் அவருடைய பங்கிற்கு அதிக மரங்களை நட்டதுமட்டுமில்லாமல் 4 விக்கெட்டுகளை வேரோடு பிடிங்கி சென்றார்.
எய்டன் மார்க்ரம், பண்ட், பூரன், அப்துல் சமாத் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் 40, ஆயுஷ் பதோனி 38, முகுல் சௌத்ரி 39 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. அவர்களுடைய அணியில் தொடக்க வீரர்களை தவிர, மிடில் ஆர்டரில் பதோனி மட்டுமே ஃபார்முடன் இருந்துவருகிறார். மற்றபடி ஒட்டுமொத்தமாக பேட்டிங் யூனிட்டே படுமோசமாக செயல்பட்டு வருகிறது.
147 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்ச்பி அணி, 15.1 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 49 ரன்கள் குவித்தார். இந்த வெற்றிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது ஆர்சிபி.