சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரசீத் கான், முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீயை பின்னுக்கு தள்ளி உலகசாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கான்.
மணிக்கட்டு பந்துவீச்சாளரான இவர் தன்னுடைய லெக் ஸ்பின் மற்றும் கூக்ளி பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகவும், ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரராகவும் அறியப்படுகிறார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக (661) விக்கெட்டுகள் எடுத்த வீரர், அதிவேகமாக 100 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என பல உலகசாதனைகளை கையில் வைத்திருக்கும் ரசீத் கான், தற்போது மற்றொரு உலகசாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யுஏஇ அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி செடிகுல்லா அடல் மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் இருவரின் அதிரடியான அரைசதத்தின் உதவியால் 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜத்ரான் 63 ரன்கள் அடித்தார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய யுஏஇ அணியில் கேப்டன் முகமது வாசீம் மற்றும் விக்கெட் கீப்பர் ராகுல் சோப்ரா இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தனர். 9 ஓவருக்கு 90 ரன்கள் என யுஏஇ அதிரடி காட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஆனால் 67 ரன்கள் அடித்த கேப்டன் முகமது வாசீம் வெளியேற, அடுத்து பந்துவீச வந்த கேப்டன் ரசீத்கான் மிடில் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி ஆப்கானிஸ்தான் அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார். 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் மட்டுமே அடித்த யுஏஇ 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத் கான், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீயை பின்னுக்கு தள்ளி 165 விக்கெட்டுகளுடன் சாதனை படைத்துள்ளார் ரசீத் கான்.