2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கான ரேஸில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா, நியூசிலாந்து தகுதிபெற்றுள்ள நிலையில், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே வலுவான போட்டி நடந்துவருகிறது.
இந்நிலையில் லாகூர் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகளின் மோதல் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, செடிகுல்லா அடலின் அபாரமான 85 ரன்கள் மற்றும் ஓமர்சாயின் 67 ரன்கள் பேட்டிங்கால் 273 ரன்களை சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்துவருகிறது. இந்த சூழலில் 4வது ஓவரில் ஃபரூக் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் கேட்சுக்கான வாய்ப்பை வழங்கினார். ஆனால் கைக்கு வந்த பந்தை ரசீத் கான் கோட்டைவிட்டார்.
அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஷார்ட் அடித்த பந்து பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த கரோட்டியின் கைகளுக்கே தேடிச்சென்றது. ஆனால் அமர்ந்து பிடிக்கவேண்டிய ஒரு சாதாரணமான கேட்ச்சை கோட்டைவிட்டார் கரோட்டி.
பின்னர் அதேஓவரில் மீண்டும் ஒரு கேட்ச்சை கொடுத்து ஷார்ட் வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது.
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட டிராவிஸ் ஹெட் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 30 ரன்களுடன் விளையாடிவருகிறார். டிராவிஸ் ஹெட் போன்ற மேட்ச்சையே திருப்பக்கூடிய வீரரின் கேட்ச்சை கோட்டைவிட்டது ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிய பாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
12.5 ஓவர் முடிவில் 109/1 என ஆஸ்திரேலியா விளையாடிவரும் நிலையில், டிராவிஸ் ஹெட் (59)மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (19) இருவரும் பேட்டிங் செய்துவருகின்றனர். இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.