Tamil Nadu cricket team pt web
கிரிக்கெட்

தொடங்கியது ரஞ்சி கொண்டாட்டம்.. 35 ஆண்டுகால கனவு.. கோப்பை வெல்லுமா தமிழ்நாடு?

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெருமை வாய்ந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடங்கியது. 35 ஆண்டுகால கனவுக் கோப்பையை தமிழக அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர் சந்தான குமார்

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெருமை வாய்ந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடங்கியது. 35 ஆண்டுகால கனவுக் கோப்பையை தமிழக அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி இந்த முறை 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகக் காலிறுதிக்கு முன்னேறும்.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் என்பது 35 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு எட்டா கனவாகவே நீடிக்கிறது. இதுவரை 90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் தமிழ்நாடு இரண்டு முறை மட்டுமே ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது . முரளி விஜய், அஷ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடிய காலத்திலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதற்குக் காரணம், நாக்-அவுட் போட்டிகளில் தமிழக பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவதுதான்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாட முடியாமல் திணறுவது முக்கியப் பலவீனமாக உள்ளது. 2023-24 அரையிறுதியில் மும்பைக்கு எதிரான தோல்வி இதற்குச் சான்று. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்குப் பயிற்சிக்குச் சென்றும், காலிறுதியில் விதர்பாவுக்கு எதிராக மீண்டும் புதிய பந்தில் தடுமாறி தோல்வியைத் தழுவியது.

இந்த பின்னடைவுகளைச் சரிசெய்யும் முனைப்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மூன்றாவது ஆண்டாக செந்தில்நாதன் என்பவரைப் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த முறை காயத்தால் சாய் கிஷோர் அணியில் இடம்பெறவில்லை. தொடக்க ஆட்டக்காரர் என். ஜெகதீசன் கேப்டனாகவும், பிரதோஷ் ரஞ்சன்பால் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாபா இந்திரஜித், ஷாருக்கான் உள்ளிட்ட அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட பலமான அணியாக களமிறங்குகிறது.

உலகத்தரச் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தமிழக அணிக்கு, முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான சாய் கிஷோர் மற்றும் காயம் காரணமாக அஜித் ராம் ஆகியோரின் விலகல் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஹேம்சுதேசன் மற்றும் வித்யுத் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் இப்போதுதான் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகின்றனர்.

தமிழ்நாட்டில் கிரிக்கெட் கட்டமைப்பு சிறப்பாகவும், தனியார் நிறுவனங்களின் உதவிகள் அதிகமாகவும் கிடைப்பினும், வீரர்கள் அதைப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. எந்த வசதியும் இல்லாத விதர்பா, சௌராஷ்டிரா அணிகள் கோப்பையை வெல்வதற்குப் போடும் உழைப்பில் பாதி உழைப்பு இருந்தாலே தமிழகம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், சென்னையில் நடக்கும் டிவிஷன் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மைதானங்கள் மிக மோசமாக இருப்பது, 4 நாள் போட்டிகளை 1-2 நாளில் முடித்து, வீரர்களின் திறனைப் பாதிக்கின்றன. இதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் உள்ளது.

இந்திய கிரிக்கெட் வரைபடத்தில் இல்லாத நிலையில் இருந்து தற்போது ரஞ்சி கோப்பையை வெல்லும் சௌராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகளிடம் இருந்து தமிழ்நாடு பாடம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தலைமையில் களமிறங்கும் தமிழ்நாடு அணி, 35 ஆண்டுகால ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது