சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணியின் ரஜத் பட்டிதார் வெறும் 48 பந்தில் 135 ரன்கள் அடித்து, 13 சிக்சர்களுடன் வரலாற்று சாதனை படைத்தார். அவரது அதிரடி ஆட்டம் அணியை 250 ரன்கள் என்ற மாபெரும் இலக்குக்கு கொண்டு சென்றது.
2026 சையத் முஷ்டாக் அலி தொடர் நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 32 அணிகள் போட்டிப்போட்டு வரும் நிலையில், ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று அவர்களுடைய குரூப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ரஜத் பட்டிதாரின் மத்திய பிரதேச அணி, அசாம் அணியை எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற அசாம் அணி பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில் மத்திய பிரதேசம் முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 7 ஓவரில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மத்திய பிரதேசம்.
4வது விக்கெட்டுக்கு ஷிவாங் குமாருடன் கைக்கோர்த்த ரஜத் பட்டிதார் சிக்சர் பவுண்டரிகளாக நாலாபுறமும் சிதறடித்து அணியை 250 ரன்கள் என்ற இமாலய டோட்டலுக்கு கொண்டுசென்றார். 4வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்த நிலையில், 13 சிக்சர்களை பறக்கவிட்ட ரஜத் பட்டிதார் வெறும் 48 பந்தில் 135 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சையத் முஷ்டாக் அலி தொடரில் சதமடித்த முதல் மத்திய பிரதேச வீரராக வரலாறு படைத்தார் ரஜத் பட்டிதார்.
சர்வதேச அணியில் மிடில் ஆர்டரில் நல்ல வீரர்களை இந்திய அணி தேடிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து ரன்களை குவித்துவருகிறார் ரஜத் பட்டிதார். விரைவில் அவரை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.