சூர்யவன்ஷி - ரஜத் பட்டிதார் web
கிரிக்கெட்

”நடப்பு ஐபிஎல் சீசனின் சிறந்த வீரர் சூர்யவன்ஷி தான்..” - ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

நடப்பு ஐபிஎல் சீசனின் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்ற சொந்த அணி வீரர்களை விட்டு வைபவ் சூர்யவன்ஷியின் பெயரை தேர்வுசெய்தார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்.

Rishan Vengai

2026 ஐபிஎல் சீசனில் வெடித்தெழுந்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தொடக்கத்தில் சிக்ஸ் ஹிட்டிங் ஆட்டத்தால் மட்டுமில்லாமல், பின்னர் நிதானமான ஆட்டத்தாலும் ரசிகர்களை கவர்ந்தார். 16 ஆட்டங்களில் 776 ரன்கள் குவித்து, பல முறை சதம் தவறியபோதும் அணிக்காக தன்னலமின்றி விளையாடிய அவரை, கோப்பை வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், புவனேஷ்வர் குமார், விராட் கோலி போன்றவர்களை விட சீசனின் சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்படி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்ததோ, அதேபோலவே 2026 ஐபிஎல் தொடரையும் தனியொரு ஆளாக திரும்பி பார்க்க வைத்தார் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி. நடப்பு சீசன் முழுவதும் தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் எதிரணி வீரர்களையே ரசிக்கவைத்த 15 வயது சுட்டி சிறுவன், பெரும்பாலான ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். தொடக்கத்தில் வெறும் சிக்ஸ் ஹிட்டிங் திறமைகளால் எல்லோரையும் கட்டிப்போட்ட சூர்யவன்ஷி, பின்னர் தன்னுடைய சாமர்த்தியமான நிதானமான ஆட்டத்தாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

vaibhav sooryavanshi

நடந்து முடிந்த சீசனில் 16 போட்டிகளில் 1 சதம் 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி, 93, 96, 97 என 3 முறை சதமடிக்கும் வாய்ப்புகள் இருந்தும் தன்னுடைய அணிக்காக அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ‘தன்னுடைய அணி வெற்றிபெறாமல், தான் பெறும் 100 ரன்கள் அர்த்தமற்றது’ என்ற மனநிலையில் இருக்கும் அவனுடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலர், அவன் சதமடிக்கவில்லையே என வேதனைப்படும் அளவு அச்சிறுவனின் மீது பேரன்பை வெளிப்படுத்தினர்.

இந்தசூழலில் கோப்பை வென்ற கேப்டனான ஆர்சிபியின் ரஜத் பட்டிதார், 2026 ஐபிஎல் சீசனின் சூப்பர் ஸ்டார் வீரர் வைபவ் சூர்யவன்ஷி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சீசனின் சிறந்த வீரர் சூர்யவன்ஷி..

கோப்பை வென்றதற்கு பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதாரிடம் நடப்பு சீசனின் சிறந்த வீரர் யார் என்ற கேள்வி வைக்கப்பட்டது. தொடர் முழுவதும் ஆர்சிபி கோப்பை வெல்ல போராடிய புவனேஷ்வர் குமார், விராட் கோலி போன்ற வீரர்களை விடுத்து வைபவ் சூர்யவன்ஷியை தேர்வுசெய்தார் ரஜத் பட்டிதார்.

rajat patidar

சூர்ய்வன்ஷி குறித்து பேசிய அவர், “சீசனின் சிறந்த வீரர் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, வைபவ் சூர்யவன்ஷி. ஏனென்றால் இளம் வீரராக இருந்தபோதும், இந்தத் தொடரில் அவர் ஆதிக்கம் செலுத்திய விதம், அவர் சாதரணமாக விளையாடவில்லை, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். அவர் தனது ஷாட்களை விளையாடிய விதம், அற்புதமானதாக இருந்தது. நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம், அவர் பந்தை எல்லைக்கோட்டிற்கு அப்பால் அடித்த விதம், மிகச்சிறப்பாக இருந்தது. அவருடைய எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள்” என பேசியுள்ளார்.