இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவும், அவரது வருங்கால மனைவி அக்ரிதி அகர்வாலும், தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரிய முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் சூழ்நிலை ஒத்து வரவில்லை என தெரிவித்துள்ள அக்ரிதி, இதுகுறித்த யூகங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் அடுத்த சச்சினாக, சேவாக்காக, லாராவாக வருவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர், பிரித்வி ஷா. 2018 யு-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்ததோடு, கோப்பையையும் பெற்றுத் தந்தவர், ஷா. அதேவேகத்தில் இந்திய அணியிலும் விரைவிலேயே இடம்பெற்றார். ஆனால், 2019 ஊக்கமருந்து சோதனையில் அவர் சிக்கியதற்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அதன்பிறகு, அக்டோபர் 2024-இல் மும்பையின் ரஞ்சி டிராபி அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷா, மகாராஷ்டிரா அணிக்காக தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் 2026 ஏலத்தின் ஆரம்பச் சுற்றுகளில் ஏலத்தில் எடுக்கப்படாத ஷா, 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்தார். இருப்பினும், 2026 ஐபிஎல் சீசனில் ஷா ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.
இதற்கிடையே, பிரித்வி ஷாவும், சமூக வலைதளப் பிரபலமும் நடிகையுமான அக்ரிதி அகர்வாலும் கடந்த மார்ச் 8 அன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, பிரித்வி ஷா அந்த நிகழ்வின் புகைப்படங்களை வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டார்.
அதில் ஒரு புகைப்படத்தில், பிரித்வி ஷா மண்டியிட்டு அகர்வாலிடம் தனது காதலைத் தெரிவிக்கும் படமும் இடம்பெற்றிருந்தது. அப்போது பதிவிட்ட பிரித்வி ஷா, “களத்தில் சிக்ஸர்கள் அடிப்பதில் இருந்து, களத்திற்கு வெளியே வாழ்நாள் முழுவதும் ஹிட் அடிப்பது வரை. அவள்தான் என் கச்சிதமான இன்னிங்ஸ்!" எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், பிரித்வி ஷாவும், அவரது வருங்கால மனைவி அக்ரிதி அகர்வாலும், தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரிய முடிவு செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் அகர்வால் இந்தப் பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருவருக்கும் தங்களது எதிர்கால இலக்குகளும் சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன என்பதை உணர்ந்த பின்னரே இந்த முடிவு பரஸ்பரமாக எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள அகர்வால், மக்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்றும், இந்த முடிவிற்கான காரணங்கள் குறித்த யூகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர், ‘நாங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும், அக்கறை கொண்டாலும், எங்கள் பாதைகள் ஒன்றாக அமையவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொறுப்புகள் மற்றும் நாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்" என அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.