pollard - hardik web
கிரிக்கெட்

‘ஹர்திக் கேப்டன்சியில் நிர்வாகம் விரும்பியபடி அமையவில்லை..’ - கீரன் பொல்லார்ட்

2026 ஐபிஎல் சீசனில் 10 தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது மட்டுமில்லாமல் 9வது இடத்தில் முடித்தது.

Rishan Vengai

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இருந்தும், 2026 ஐபிஎல் சீசனில் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. 2024 முதல் ஹர்திக் கேப்டன்சியில் நிலைமை சீராகாததால், நிர்வாகம் விரும்பியபடி திட்டங்கள் செயல்படவில்லை என கீரன் பொல்லார்ட் விமர்சித்தார். அணியின் எதிர்காலத்துக்கான மாற்றங்கள் குறித்து உள்ளக விவாதங்கள் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிய 4 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளேஆஃப்க்கு தகுதிபெற்றுள்ளன. அதேநேரம் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிகளும் மோசமாக விளையாடி தொடரிலிருந்தே வெளியேறியுள்ளன.

MI, 2026

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிகாக், ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், டிரெண்ட் போல்ட் போன்ற பல சாம்பியன் வீரர்கள் இருந்தும் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸின் மோசமான தோல்வி குறித்து பேசியிருக்கும் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்வாகம் விரும்பியபடி அமையவில்லை..

ஹர்திக் பாண்டியா 2024ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகான மூன்று சீசன்களிலும், மிகவும் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் கீழ் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறத் தவறிவிட்டது. 2024-ல் கேப்டனாகப் பொறுப்பேற்ற தனது முதல் சீசனில் கடுமையாகக் கேலி செய்யப்பட்ட பிறகு, ஹர்திக் 2025-ல் ஓரளவிற்கு நிலைமையைச் சீரமைத்தார். இவற்றிற்கு பிறகு 2026-ல் மும்பை சிறப்பாக விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தபோதும், அவர்களால் நினைத்ததை செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் மும்பையின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட், "ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரையில் ஒரு கேப்டன் என்ற முறையிலும், தனிநபராகவும் அவர் விரும்பிய அளவுக்கு இந்தசீசன் சிறப்பாக அமையவில்லை. நிர்வாகக் குழுவாக நாங்கள் விரும்பியபடியும் அது அமையாமல் போயிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் அனைவருக்கும் தெரியும், இந்த அணியை சிறப்பாக வழிநடத்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்க நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்தோம்" என்று பொல்லார்ட் கூறினார்.

இருப்பினும், இந்த சீசனை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அணியின் எதிர்காலம் மற்றும் சாத்தியமான மாற்றங்கள் குறித்த விவாதங்கள் அணிக்குள்ளேயே நடைபெறும் என்று பொல்லார்ட் சூசகமாகத் தெரிவித்தார்.