TSK - MINY cricinfo
கிரிக்கெட்

’Super Kings-னாலே அடிதான்..’ கெட்டப் மாறுனாலும் கேரக்டர் மாறல! TSK-ஐ பொளந்த பொல்லார்டு! ஃபைனலில் MI!

2025 மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் குவாலிஃபையர் போட்டியில் சூப்பர் கிங்ஸை தோற்கடித்து கெத்தாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது MI நியூயார்க் அணி.

Rishan Vengai

அமெரிக்காவில் நடந்துவரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் மூன்றாவது சீசன் ஜுன் 12 முதல் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

TSK - Du Plessis

தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் முதலிரண்டு இடத்தை ஆக்கிரமித்தன. மூன்றாவது இடத்தை சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் பிடித்த நிலையில், முதல் 7 போட்டியில் 6-ல் தோற்ற MI நியூயார்க் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலேயே இருந்தது.

pollard

ஆனால் அதற்கு அடுத்த முக்கியமான போட்டிகளில் எல்லாம் ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்திய பொல்லார்டு, MI அணியை தனியாளாக எலிமினேட்டர் போட்டிக்கு அழைத்துவந்தார். அங்கு யூனிகார்ன்ஸை தோற்கடித்து குவாலிஃபையர் 2-க்கு தகுதிபெற்ற MI, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடியது.

Super Kings-னாலே அடிதான்.. வெளுத்துவாங்கிய பொல்லார்டு!

முதல் இரண்டு சீசன்களிலும் பிளேஆஃப் வரை வந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு சென்றதில்லை. இதனால் இந்தமுறை டூபிளெசிஸ் தலைமையில் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்றார்போல் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய டூபிளெசிஸ், அணியை தாங்கி எடுத்துவந்தார்.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சூப்பர் கிங்ஸ், குவாலிஃபையர் 1 போட்டியில் வாஷிங்டனுக்கு எதிராக தோற்று குவாலிஃபையர் 2-ல் MI நியூயார்க்கை எதிர்கொண்டது. எப்படியும் சூப்பர் கிங்ஸ் கம்பேக் கொடுத்து இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் மொத்த கனவையும் சுக்குநூறாக நொறுக்கி தள்ளிவிட்டார் கிரன் பொல்லார்டு.

முதலில் விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 166 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டூபிளெசிஸ் 59 ரன்களும், அகீல் ஹொசைன் 55 ரன்களும் அடித்தனர்.

167 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய MI நியூயார்க் அணியில், தொடக்க வீரராக விளையாடிய மோனங் பட்டேல் நிதானமாக விளையாடி 39 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். அதற்குபிறகு வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அடித்தாலும், இடையிடையே சிறப்பான ஓவர்களை வீசிய சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கியிருந்தது.

கடைசி 4 ஓவருக்கு 50 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற இடத்தில் இருந்தது. அப்போது 17வது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என சிதறடித்த கிரன் பொல்லார்டு அந்த ஒருஓவரில் மட்டும் 23 ரன்களை விளாசி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றினார்.

213 ஸ்டிரைக்ரேட்டில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்செய்த பொல்லார்டு 47 ரன்கள் குவித்து MI நியூயார்க்கை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முதல் சீசனில் கோப்பை வென்ற MI நியூயார்க் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. தொடர்ச்சியாக 3 முறை பிளேஆஃப் வரை வந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல்லில் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வில்லனாக மாறி வெளுத்துவாங்கும் கிரன் பொல்லார்டு, ’கெட்டப்ப மாத்துனாலும் கேரக்டர மாத்த மாட்டிங்குறியே’ என்பது போல 2010-லிருந்து தற்போதுவரை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நைட்மேராக இருந்துவருகிறார்.