”2 நாட்களுக்கு முன்னர் தான் டை அடித்தேன்..” முதல்முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்த கோலி!
’சேஸ் மாஸ்டர், ரன் மெஷின்’ என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நவீனகால சாம்பியன் கிரிக்கெட்டராக வலம்வரும் விராட் கோலி, 36 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் பேரதிர்ச்சி கொடுத்தார்.
ஓய்விற்கு பிறகு பொதுவெளியில் அதுகுறித்து பேசாத விராட் கோலி, யுவராஜ் சிங்கின் YouWeCan அறங்கட்டளையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசினார். அங்கு அவருடன் சக ஆர்சிபி வீரர் கிறிஸ் கெய்ல், சச்சின் டெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், ரவி சாஸ்திரி, ஆஷிஷ் நெஹ்ரா, பிரையன் லாரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு சென்றபிறகு, விராட் கோலி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது ஓய்வு குறித்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ரவி சாஸ்திரி குறித்தும் பேசினார்.
ஓய்விற்கான நேரம்வந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியும்..
நிகழ்ச்சி தொகுப்பாளர் கௌரவ் கபூர் விராட் கோலியை பேச மேடைக்கு அழைத்தபோது, டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் கோலி இல்லாததை எல்லோரும் மிஸ் செய்கிறார்கள் என்பதை கூறினார்.
அப்போது முதல்முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்த கோலி, “இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னுடைய தாடிக்கு டை அடித்தேன். 4 நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய தாடிக்கு நீங்கள் டை அடிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்” என ஜாலியாக தெரிவித்தார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்த ரவிசாஸ்திரி குறித்து பேசிய கோலி, “நேர்மையாகச் சொன்னால், நான் அவருடன் வேலை செய்யவில்லை என்றால்... டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்தது எல்லாம் சாத்தியமில்லாமல் போயிருக்கும். எங்கள் இருவருக்கும் இருந்த புரிதல் மற்றும் தெளிவைக் கண்டறிவது மிகவும் கடினம். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் வாழ்க்கையில் வளர இதுதேவை. அவர் என்னை முழுமையாக ஆதரித்தார், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்னின்று பல குண்டுகளை வாங்கினார். அவர் இல்லையென்றால் என் சார்ந்த பல விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும், எனது கிரிக்கெட் பயணத்தின் ஒரு பெரிய பகுதியாக இருந்ததற்காக நான் எப்போதும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளேன்” என விராட் கோலி பேசினார்.