deepti sharma pt web
கிரிக்கெட்

தீப்தி எனும் ‘தீ’.. எண்கள் சொல்லும் சாதனைகள்..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒருநாள் ஐசிசி உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

Sports Desk

நவி மும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருகிறது இந்திய அணி. முதலில் விளையாடிய இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. 87 ரன்களுடன் ஷஃபாலி வர்மாவும், 58 ரன்களுடன் தீப்தி ஷர்மாவும் அபாரமாக ஆடினர். பந்துவீச்சிலும் மிரட்டிய தீப்தி ஷர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 299 ரன்களைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா, அணியின் கேப்டன் வோல்வார்ட் சதம் அடித்தும், 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட தீப்தி ஷர்மா 'தொடர் நாயகி' விருதை வென்றார். இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய ஷஃபாலி வர்மா 'ஆட்ட நாயகி' விருதை வென்றார்.

இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களையும், 59 ரன்களையும் குவித்த தீப்தி ஷர்மா தொடர் முழுவதும் பல்வேறு சாதனைகளைப் புரிந்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் நாக் அவுட் சுற்று போட்டியொன்றில், அது ஆடவருக்கான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அரைசதமும் அடித்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையை தீப்தி ஷர்மா படைத்திருக்கிறார். அதேபோல், மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை தீப்தி ஷர்மா. இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு நடந்த தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 7 இன்னிங்ஸில் விளையாடியிருக்கும் தீப்தி ஷர்மா மொத்தமாக 215 ரன்களைக் குவித்திருக்கிறார். அதில் 3 அரைசதங்களும் அடக்கம். அதேபோல் 9 இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 81 ஓவர்களை வீசியிருக்கும் தீப்தி 449 ரன்களை விட்டுக்கொடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் தீப்தி ஷர்மா இருக்கிறார்.

மகளிர் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் 22 விக்கெட்டுகளை வீழ்த்துவதென்பது, மகளிர் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சமாகும். இதற்கு முன் 1982 உலகக்கோப்பையில், லின் ஃபுல்ஸ்டன் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி முடிந்து பேசிய தீப்தி ஷர்மா, “இது ஒரு கனவுபோல் இருக்கிறது. அந்த உணர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை. உலகக்கோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக பங்களிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கிடைக்கும் அனுபவங்களையும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும்  எப்போதும் சிந்தித்தோம். மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. ஒரு அணியாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

எந்த துறையிலோ, எந்த நிலையிலோ இருந்தாலும், நான் எப்போதும் ரசித்தே விளையாடுவேன். அந்த நிலையின்படி விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆல்-ரவுண்டர் என்கிற வகையில் இப்படிப்பட்ட மேடையில் விளையாடும் அனுபவம் அற்புதமானது.