gambhir - hardik pti
கிரிக்கெட்

மீண்டும் பாண்டியாவிற்கு காயம்.. கடுப்பான கவுதம் கம்பீர்! அரைகுறை வீரர் தேவையில்லை!

வருவது.. 10-15 போட்டிகளில் 2 ஆட்டத்தில் மட்டுமே விளையாடுவது.. பின்னர் மீண்டும் காயம் என கூறிவிட்டு சென்றுவிடுவது என்ற Mode-ல் தான் ஹர்திக் பாண்டியா இருந்துவருகிறார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்குப் பிறகு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பற்றாக்குறை நீடிக்க, ஹர்திக் பாண்டியா ஒரே நம்பிக்கையாக உருவெடுத்தார். ஆனால் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக 2023 உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் போன்ற முக்கிய வாய்ப்புகளை இழந்துள்ளார். 2027 உலகக்கோப்பை முன்னே, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அரைகுறைத் தயாரிப்புடன் ஹர்திக், பும்ரா போன்றோருக்கு இடமில்லை என எச்சரிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கான பஞ்சம் இன்றுவரை தீராமலே இருந்துவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தாலும் கூட, அதற்கான விடையை இன்றுவரை இந்திய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டிலேயே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பட்டியல் என எடுத்துக்கொண்டால், அதில் ‘கபில்தேவ்’ என்ற ஒருபெயர் மட்டுமே இன்றுவரை இருக்கிறது. அவர் ஓய்வுபெற்று 32 ஆண்டுகள் ஆனபிறகும், இந்திய அணிக்கு அவரைப்போன்ற ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இன்னமும் கிடைக்கவில்லை. அவருக்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்தது ஹர்திக் பாண்டியா மட்டுமே.

hardik pandya

140 கிமீ வேகத்தில் பந்துவீசுவதோடு, ஆட்டத்தையே மாற்றக்கூடிய பேட்டிங்கையும் வெளிப்படுத்தும் வீரர் என்பதால், நீண்ட கால தேடலின் விடையாக ஹர்திக் பாண்டியா கிடைத்தார். ஆனால் அடிக்கடி காயம் அடையக்கூடிய வீரராக ஹர்திக் இருப்பதால் இந்திய அணிக்கு அது தொடர்ந்து பின்னடைவாகவே இருந்துவருகிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா, இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை. அதைத்தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் ஒருநாள் வடிவத்திற்கு தான் அவரால் திரும்ப முடிந்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை ஒருநாள் வடிவத்திற்கு திரும்பாத ஹர்திக், தற்போதும் ஃபிட்னஸ் இல்லாமல் தான் இருந்துவருகிறார். இதற்கிடையில் 2024 டி20 உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, 2027 உலகக்கோப்பையில் இந்தியா எதிர்பார்க்கும் முக்கிய வீரராக இருக்கிறார்.

gambhir

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவர் இணையமாட்டார் என்றாலும், அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹர்திக்கிற்கு புதிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தசூழலில் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கியமான வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போவது குறித்து பேசியிருக்கும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "உலகக் கோப்பைக்குள் அரைகுறைத் தயாரிப்புடன் செல்ல முடியாது. அது ஹர்திக் பாண்டியா ஆகட்டும், ஜஸ்பிரித் பும்ரா ஆகட்டும், அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்காவில் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஹர்திக்கைப் போல, பத்து ஓவர்கள் பந்துவீசி, 6 அல்லது 7-வது இடத்தில் களமிறங்கி அவ்வளவு தாக்கத்துடன் ரன்களைக் குவிக்கக்கூடிய வீரர்கள் மிகச் சிலரே உள்ளனர். ஆனால் அனைத்தும் இருந்தாலும் உலகக்கோப்பை அணியில் சரியான தயாரிப்பு இல்லாமல் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, எங்களின் கவனம், குறிப்பாக ஹர்திக்கின் மீதே உள்ளது. அவருக்கு விளையாடும் நேரம் தேவைப்படுகிறது. அதைப்பொறுத்தே முடிவு எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

கம்பீர் உடற்தகுதி மற்றும் அனுபவம் இரண்டையும் உலகக்கோப்பைக்கு எதிர்பார்ப்பதால், ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணிக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் இதுவே அவருக்கான கடைசி உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.