ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான ஆசியக்கோப்பை ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஆசியக்கோப்பை அணியிலிருந்து மூத்தவீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இல்லையென்றாலும், 17 வீரர்கள் கொண்ட இந்த அணி இந்தியாவை வீழ்த்தும் திறனுடன் இருப்பதாக பாகிஸ்தானின் தேர்வாளர் ஆக்கிப் ஜாவேத் கூறியுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரரும், பாகிஸ்தான் தேர்வாளருமான ஆக்கிப் ஜாவேத் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து கூறுகையில், “இந்தியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாகும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் இது எப்படியான போட்டி என்பது தெரியும், மேலும் பங்கேற்கும் அனைவருக்கும் அதன் முக்கியத்துவமும் புரியும்.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இல்லையென்றாலும் இந்த 17 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி எந்த அணியையும் தோற்கடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.