பாகிஸ்தான் - இங்கிலாந்து x
கிரிக்கெட்

ODI வரலாற்றில் தலைசிறந்த போட்டி.. கடைசிவரை வாழ்வா? சாவா?.. 1 விக்கெட்டில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த போட்டியாக பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மாறியது.

Rishan Vengai

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி கடைசிவரை பரபரப்பாக அமைந்தது. 242 ரன்கள் இலக்கை நோக்கி போராடிய பாகிஸ்தான், ஷதாப் கானின் அதிரடியுடன் 1 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷதாப் கானின் துணிச்சலான ஆட்டம் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தானில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் மோதிவருகின்றன. ஹாரி ப்ரூக்கின் அதிவேக இரட்டை சதம், இலங்கையின் 430 ரன்கள் ரன்சேஸ் என தொடரே கலைகட்டிவரும் நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முந்தைய போட்டிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் போட்டியாக அமைந்தது.

பரபரப்பாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 241 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அனைவரும் அவுட்டான போதும் சதமடித்த பென் டக்கெட் அணியை நல்ல டோட்டலுக்கு எடுத்துவந்தார்.

இந்தசூழலில் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 விக்கெட்டுகளை சரியவிட்டது. 154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் விழுந்தபிறகு இங்கிலாந்து அணிக்கே வெற்றி என எல்லோருமே நினைத்திருந்தனர். ஆனால் 8வது வீரராக களமிறங்கிய ஷதாப் கான் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடினார். 11வது வீரராக விளையாடிய ஹாரிஸ் ராஃப் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஒருபக்கம் நிலைத்து நிற்க, 96 பந்தில் 13 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பந்தாடிய ஷதாப் கான், பாகிஸ்தான் அணியை 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஹரிஸ் ராஃப், சதாப் கான் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தது.

இதற்கிடையில் ஹரிஸ் ராஃப் இங்கிலாந்து பவுலர்கள் இடையேயான மோதல், ஹாரிஸ் ராஃப்க்கு அவுட் கொடுக்கப்பட்டு பின்னர் ரிவ்யூவில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது என பல்வேறு விரல்கடிக்கும் மொமண்ட்கள் அரங்கேறின. மொத்தமாக இந்தப்போட்டி கடைசிவரை திக் திக் நிமிடங்களாகவே அமைந்தது. பல கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் போட்டிக்கும், முத்தரப்பு தொடருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என கோரிக்கை வைத்து தலைசிறந்த போட்டி என பாராட்டு தெரிவித்தனர்.