pak vs ind AsianCricketCouncil
கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்.. 337 ரன்கள் குவித்து PAK அதிரடி! உஸ்மான் கான் சதம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

Rishan Vengai

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதியில் பாகிஸ்தான் அணி 337 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கடின இலக்கை அமைத்தது. உஸ்மான் கான் சதமடித்து அசத்தியதோடு, அப்துல் காதிர் மற்றும் ஃபர்ஹான் யூசுப் சிறப்பாக விளையாடினர். இந்தியா 107/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பைத் தொடர் கடந்த நவம்பர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, நேபாள், பாகிஸ்தான், யுஏஇ, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடின.

இத்தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் வீழ்த்தியதோடு, அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மறுபக்கம் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, மற்ற அணிகளை எல்லாம் வீழ்த்தியதோடு அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

லீக் போட்டியில் இந்தியாவை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி கோப்பை வெல்லும் லட்சியத்தோடும், லீக் சுற்றில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்திய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

337 ரன்கள் குவித்த பாகிஸ்தான்!

பரபரப்பாக தொடங்கப்பட்ட இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. பாகிஸ்தான் பவுலர்கள் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிறப்பாக வீசுவார்கள் என்பதால் பிளாட் டிராக் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கொடுக்கப்பட்ட பிளாட் டிராக் ஆடுகளத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினர்.

தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் கான் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி சதமடித்து அசத்தினார். உஸ்மான் கான் 107 ரன்கள், அப்துல் காதிர் 80 ரன்கள், ஃபர்ஹான் யூசுப் 63 ரன்கள் என அடிக்க 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

338 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யவீர் சேவாக் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 9 பவுண்டரிகளுடன் அரைசதமடித்து அசத்தினார். முன்னதாக நடைபெற்றபோட்டியில் சதமடித்தவர் என்பதால், ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக 58 ரன்கள் அடித்தபோது ஆட்டமிழந்தார் ஆர்யவீர்.

20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களுடன் விளையாடிவருகிறது இந்தியா.