இந்திய வீரர்களுடன் கைக்குலுக்க காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் web
கிரிக்கெட்

மீண்டும் காத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள்.. மீண்டும் அவமதித்த இந்திய வீரர்கள்! #Viral_Video

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் கைக்குலுக்க காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rishan Vengai

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பாகிஸ்தான் - இந்தியா மோதல்களை கடந்து பாகிஸ்தான் - இந்திய வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை என்பதே ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது. சமீபத்தில் பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் கூட இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுப்பது சிறுபிள்ளைத் தனமானது என்று விமர்சித்திருந்தார். இந்தசூழலில் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கை குலுக்கவில்லை என்பதால், நீண்ட நேரம் காத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்... மைதானத்தில் நடந்தது என்ன பார்க்கலாம்!

கிரிக்கெட் களத்திற்கும் வந்த அரசியல்..

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக களமிறங்கிய இந்திய ராணுவம் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் உறவில் விரிசல் மேலும் அதிகமானது. இந்த விரிசல் அரசியலை கடந்து கிரிக்கெட் போட்டிகளிலும் எதிரொலித்தது..

இந்தியா - பாகிஸ்தான்

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை.. டாஸின் போது சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கைகுலுக்க மறுத்துவிட்டார். அதே போல போட்டி முடிந்த பிறகும் இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக்கொள்ளவில்லை.. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் வரை சென்ற பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணியின் கதவு சாத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிவந்தனர்.

அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையை வாங்க சூர்யகுமார் மறுத்துவிட்டார்.. பின்னர் கோப்பையே இல்லாமல் இந்திய அணி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

மீண்டும் கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்..

இந்த நிலையில் தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் 15ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் மோதின.. இந்த போட்டியின் போதும் பாகிஸ்தான் கேப்டனுடன் சூர்யகுமார் யாதவ் கை குலுக்க மறுத்துவிட்டார்.. அதே போல போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்கவில்லை..

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கை குலுக்குவது குறித்து சூர்யகுமார் யாதவிடம் கேட்ட போது, "பொறுத்திருந்து பாருங்கள்" என சூசகமாக பேசியிருந்தார்.. இந்த நிலையில் தான் போட்டியின் போது கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்திருக்கின்றனர்..

இதற்கிடையே இந்தப் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஷிகின்ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் ஆகியோர் இந்திய வீரர்களிடம் கை குலுக்க காத்திருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.. ஆனால் இந்திய வீரர்கள் வராததால், காத்திருந்த அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்..

பாகிஸ்தான் வீரர்களிடம் கை குலுக்க வேண்டாம் என்ற கொள்கை முடிவு தொடர்வதாக, போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.