பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு பிபிஎல்லில் நேர்ந்த அவமானம் web
கிரிக்கெட்

’நீ ஆடுனது போதும், வெளியே வா..’ BBL-ல் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு நேர்ந்த அவமானம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரான பிக் பாஸ் லீக்கில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ரிஸ்வானுக்கு அவமரியாதை நடந்ததாக அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

Praveen Joshva L

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் BBL போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடியபோது, மெதுவாக ஆடியதால் கேப்டன் வில் சுதர்லாந்து அவரை வெளியே வருமாறு அழைத்தார். இதனால் ரிஸ்வான் அவமானத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். பாகிஸ்தான் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியை தொடந்து ஆஸ்திரேலியாவில் BBL லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொடரில் ஐபிஎல் போலவே ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் அந்தந்த அணி வீரர்களை ஏலத்தில் அல்லாமல், ஒப்பந்தம் மூலம் வீரர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான BBL தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான், ஹரிஸ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி ஆகிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ரிஸ்வானை மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, சுமார் ஒரு கோடி மதிப்பில் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்தது.

அவர் கடந்த போட்டிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், கடைசியாக மெல்போர்ட் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவர் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் மிகவும் மெதுவாக ஆடிய அவர் 23 பந்தில் 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

சிறந்த பேட்டிங் ஆடுகளத்தில் பிற வீரர்கள் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மட்டும் மிகவும் மெதுவாக ஆடியதால் மெல்போர்ட் ரெனிகேட்ஸ் அணியின் ரன் வேகம் அதிகரிக்காமல் இருந்தது.

இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் வில் சுதர்லாந்து, 18ஆவது ஓவர்கள் முடிந்தப் பிறகு, பெவிலியன் லைனில் நின்றுகொண்டு, ரிஸ்வானை பார்த்து, கை காட்டி, வெளியே வா என்று அழைத்தார். இதனால் வேறு வழியின்றி ரிஸ்வானும் தலையை தொங்கப்போட்டு கொண்டே மைதானத்தில் இருந்து ரிட்டையட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் கடைசி 2 ஓவர்களில், ரெனிகேட்ஸ் அணி, 16 ரன்களை எடுத்ததால், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 15.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால், டிஎல்எஸ் விதிமுறைப்படி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் ரிஸ்வானை மெல்போர்ட் ரெனிகேட்ஸ் அணி அவமதித்து விட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் தனக்கு நேர்ந்த இந்த அவமரியாதை குறித்து ரிஸ்வான் அணி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், மீதம் உள்ள போட்டிகளில் பங்கேற்காமல் தொடரில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.