ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடரானது நவம்பர் 29 முதல் டிசம்பர் 08-ம் தேதிவரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள், ஜப்பான் முதலிய 8 அணிகள் விளையாடுகின்றன.
ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது இன்று துபாய் சரவதேச மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் கான் மற்றும் ஷாஜாய்ப் கான் இருவரும் முதல் விக்கெட்டையே விட்டுக்கொடுக்குமாமல் 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர்.
சிறப்பாக விளையாடிய உஸ்மான் கான் அரைசதமடித்து வெளியேற, தொடர்ந்து 5 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஷாஜாய்ப் கான் 147 பந்துகளில் 159 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
இந்தியாவிற்கான எதிரான யு19 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைத்தார் ஷாஜாய்ப் கான்.
282 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் கூட சோபிக்கவில்லை. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 1 ரன்னில் வெளியேறினார். 81 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிகில் குமார் ஒருவர் மட்டுமே நிதானமான விளையாடி ரன்களை எடுத்துவந்தார்.
6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த நிகில் குமாரும் வெளியேற, 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி தோல்வியை தழுவியது.