2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய ஓமன் web
கிரிக்கெட்

2026 டி20 WC பயிற்சி ஆட்டம்| இலங்கையை பந்தாடிய 44 வயது வீரர்.. ஓமனுக்கு எதிராக தோல்வி!

2026 டி20 உலகக்கோப்பையின் பயிற்சி போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது இலங்கை ஏ அணி..

Rishan Vengai

2026 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், 44 வயது ஆமிர் கலீமின் மிரட்டலான பேட்டிங்கால் ஓமன் அணி இலங்கை ஏ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை ஏ அணி 145 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், ஓமன் 18வது ஓவரில் இலக்கை எட்டியது.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.

2026 டி20 உலகக்கோப்பை

இந்தசூழலில் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்களில் அனைத்து அணிகளும் விளையாடிவருகின்றன.

அந்தவகையில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஓமன் அணியை எதிர்கொண்டு விளையாடிய இலங்கை ஏ அணி தோல்வியை சந்தித்துள்ளது.

ஓமனிடம் தோற்ற இலங்கை..

இலங்கை கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக 7வது வீரராக களமிறங்கி பவுலிங் ஆல்ரவுண்டர் சாஹன் 29 ரன்கள் அடித்தார்.

ஆமிர் கலீம்

146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 44 வயது வீரர் ஆமிர் கலீம் 47 பந்தில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 80 அடித்து மிரட்டினார். 18வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிய ஓமன் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இலங்கை சீனியர் அணி தோற்றுவரும் நிலையில், ஓமனுக்கு எதிராக தங்களுடைய சொந்தமண்ணில் இலங்கை ஜூனியர் அணியும் தோற்றுள்ளது.