யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா web
கிரிக்கெட்

யுவராஜ் சிங் 2.O| 15 வயதில் 1200 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா.. டி20-ன் எதிர்காலமாக மாறிய கதை!

இந்திய அணியில் டி20 எதிர்காலமாக பார்க்கப்படும் இடது கை தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தன்னுடைய 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அபிஷேக் சர்மா குறித்து சுவாரசியமான தகவல்கள் குறித்து பார்க்கலாம்..

Rishan Vengai

3 1/2 வயது முதல் கிரிக்கெட்..

ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்டராக இருந்துவரும் இந்திய நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, 2000-ம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் பிறந்தார். அவருடைய தந்தை ராஜ்குமார் சர்மா 22 வயதுக்குட்பட்டோருக்கான வடக்கு மண்டல அணியில் விளையாடியவர்.

abhishek sharma

மூன்றரை வயதில் கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்த அபிஷேக் சர்மாவிற்கு அவருடைய தந்தைதான் முதல் பயிற்சியாளர். 7 வயது முதல் முறையான கிரிக்கெட் பயிற்சியை துவங்கிய அபிஷேக் சர்மா, அமிர்தசரஸில் உள்ள உள்ளூர் மைதானங்கள் முதல் இந்தியாவின் சர்வதேச மைதானங்கள் வரை, அவரது தந்தையின் ஆரம்பகால வழிகாட்டுதலால் கிரிக்கெட்டை வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார்.

15 வயதில் 1200 ரன்கள் குவிப்பு..

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 15 வயதில் ஜூனியர் கிரிக்கெட்டில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் அபிஷேக் சர்மா. 2015-16 விஜய் மெர்ச்சண்ட் டிராபியில் விளையாடிய ​​அவர், வெறும் 7 போட்டிகளில் 1200 ரன்களை குவித்ததுடன் 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

abhishek sharma

அவரது ஆல்ரவுண்ட் திறமை அவரை தொடரின் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆக்கியது மட்டுமில்லாமல், அவருக்கு மதிப்புமிக்க ராஜ் சிங் துங்கர்பூர் விருதையும் பெற்றுத் தந்தது.

ஐபிஎல் ஏலத்தில் சும்மா எடுக்கப்பட்டவர் அபிஷேக் ஷர்மா..

2018-ம் ஆண்டு பிரித்வி ஷா, சுப்மன் கில் இடம்பெற்றிருந்த யு19 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த அபிஷேக் சர்மா, 17 வயதில் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற கையோடு ஐபிஎல் ஏலத்திற்கு சென்றார்.

abhishek sharma

2018 ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடித்த அவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு பிக் செய்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஆனாலும் அவருக்கு மற்ற அணிகளும் போட்டிபோட முடிவில் 55 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர். அந்த ஏலத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் நினைவிருக்கலாம், ஒரு கட்டத்தில் இவரை எதுக்கு நாம் போட்டிப்போட்டு எடுக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு சென்ற டெல்லி உரிமையாளர், சரி எடுத்துவைப்போம் என்ற தொணியில் தான் அணிக்குள் எடுத்தார்.

abhishek sharma

2018 ஐபிஎல் சீசனில் அபிஷேக் சர்மாவிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை, 19 பந்தில் வேகமாக 48 ரன்கள் அடித்தபோதும் அவரின் திறமையை உணராத டெல்லி அணி 2019 ஐபிஎல் தொடரில் வெளியேற்றியது.

ரோல்மாடலே கோச்சாகவும் மாறினார்..

2018-2019 காலகட்டத்தில் சாதாரண ஒரு வீரராக இருந்த அபிஷேக் சர்மாவை, அவருடைய ரோல் மாடலான யுவராஜ் சிங் மெருகேற்றும் வேலையில் இறங்கினார். பஞ்சாபை சேர்ந்த அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங்தான் ரோல் மாடல் மற்றும் ஐடியல்.

yuvraj singh - abhishek sharma

2019 கோவிட் காலத்தில் யுவராஜ் சிங்கின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற அபிஷேக் சர்மா, தன்னுடைய பேட்டிங் ஸ்கில்லையும், பேட் ஸ்பீடையும் யுவராஜ் சிங் ஆலோசனையில் மாற்றிக்கொண்டார். அதுவரை ஒரு சாதாரண வீரராக இருந்த அபிஷேக், அதற்குபிறகு ஒரு சிதறடிக்கும் வீரராக உருமாறினார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல், தினசரி எப்படி உடலை தயார் செய்யவேண்டும் என்ற டெய்லி ரொட்டீனையும் யுவராஜ் சிங் ஆலோசனைப்படியே தற்போதும் பின்பற்றிவருகிறார் அபிஷேக் சர்மா.

அபிஷேக் சர்மா

எப்போதெல்லாம் அபிஷேக் சர்மா நன்றாக விளையாடுகிறாரோ, அப்போதெல்லாம் யுவராஜ் சிங் அவரை பொதுவெளியில் பாராட்டுவதில் தயக்கம் காட்டியதில்லை. அதேவேளையில் ஏதாவது போட்டியில் தவறு செய்திருந்தாலும் யுவராஜ் சிங் அதை பொதுவெளியிலேயே சுட்டிக்காட்டியும் வருகிறார். யுவராஜ் சிங்கிற்கு இருந்த பேட் ஸ்விங் அபிஷேக் சர்மாவிற்கும் இருப்பதால் அவரை யுவராஜ் சிங் 2.O என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

கடன் வாங்கிய பேட்டால் சதமடித்த அபிஷேக்..

அபிஷேக் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் ஜூலை 2024-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக கிடைத்தது. தனது முதல் போட்டியில் டக்அவுட்டில் வெளியேறிய அபிஷேக் சர்மா, அடுத்த ஆட்டத்தில் தன்னுடைய நண்பர் சுப்மன் கில்லிடம் இருந்து பெற்ற பேட்டோடு களம்கண்டார்.

abhishek sharma

இரண்டாவது டி20 போட்டியில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என விளாசிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அன்று ஆடிய அவருடைய அதிரடியான இன்னிங்ஸ் டி20 கிரிக்கெட்டில் அவருடைய அறிமுகத்தை விதைத்தது. 2024-ல் மட்டும் அவர் 44 டி20 சிக்சர்களை பறக்கவிட்டார்.

அபிஷேக் சர்மா

அப்படியே அவருடைய ஃபார்ம் 2025 ஐபிஎல் தொடரில் ஆக்ரோஷமான பேட்டராக அவரை மாற்றியது. ஹைதராபாத் அணிக்காக 55 பந்துகளில் 145 ரன்கள் குவித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக 135 ரன்கள் குவித்து மிரட்டினார்.

தற்போது தன்னுடைய சக நண்பரான டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 டி20 பேட்டராக மாறியிருக்கும் அபிஷேக் சர்மா, 2025 ஆசியக்கோப்பைக்கு தயாராகி வருகிறார். 2026 டி20 உலகக்கோப்பையை வெல்ல அபிஷேக் சர்மாவே முக்கிய காரணமாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.