சையத் முஷ்டாக் அலி டிராபியில், மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஆந்திரா அணியின் நிதிஷ் குமார் ரெட்டி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். 113 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு, 3வது ஓவரில் தொடக்க வீரர் ஹர்ஷ் கவாலி, ஹர்ப்ரீத் சிங் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், சூப்பர் லீக் போட்டிகள் நடந்துவருகிறது.
சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்..
இன்று நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் மத்திய பிரதேஷ் மற்றும் ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்தசூழலில் 113 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு 3வது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் நிதிஷ் குமார் ரெட்டி. 2.4 ஆவது பந்தில் தொடக்கவீரர் ஹர்ஷ் கவாலியை போல்டாக்கி வெளியேற்றிய நிதிஷ், அடுத்துவந்த ஹர்ப்ரீத் சிங்கை கோல்டன் டக்கில் வெளியேற்றினார். அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளுக்கு பின் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதாரும் போல்டாகி வெளியேற ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் நிதிஷ் குமார் ரெட்டி.
தொடர்ந்து 3 விக்கெட்டை இழந்தாலும் இறுதிவரை போராடிய மத்திய பிரதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.