ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யப்போகும் முக்கியமான போட்டியாக 4வது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் (140 ரன்கள்), லபுசனே (72 ரன்கள்), சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்) முதலிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய இலக்கை பதிவுசெய்த பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 ரன்களில் ஜெய்ஸ்வால், 36 ரன்களில் விராட் கோலி என விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் இந்தியாவின் கைகளே ஓங்கியிருந்தது.
ஆனால் ஜெய்ஸ்வால் துரதிருஷ்டவசமாக 82 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேற, அடுத்த ஓவரிலேயே விராட் கோலியும் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவின் கடைசி 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய வீரர்கள் போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
164/5 என்ற இக்கட்டான நிலைமையில் 3வது நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கிய நிலையில், ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் அவுட்டாகி வெளியேறினார். ஜடேஜாவும் மறுமுனையில் நடையை கட்ட அவ்வளவுதான் இந்திய அணியும் சோலி முடிஞ்சது என்ற நிலைமையே இருந்தது.
ஆனால் அங்கிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரும் இந்திய அணியை மீட்டு கொண்டுவர போராடினர். அற்புதமாக விளையாடிய வாசிங்டன் அரைசதமடித்து வெளியேற, தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில் இந்திய அணி 358/9 என்ற நிலையில் உள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களிலும், முகமது சிராஜ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
* சச்சின் டெண்டுல்கர் (18 வருடம் 256 நாட்கள்), ரிஷப் பண்டிற்கு (21 வருடம் 92 நாட்கள்) பிறகு குறைந்த வயதில் ஆஸ்திரேலியாவில் முதல் சர்வதேச சதமடித்த வீரர் என்ற பெருமையை நிதிஷ்குமார் (21 வருடம் 216 நாட்கள்) பெற்றுள்ளார்.
* ஆஸ்திரேலியா மண்ணில் 8வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரராகவும் நிதிஷ்குமார் மாறி சாதனை படைத்துள்ளார்.
*பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கபில்தேவ், விரேந்தர் சேவாக், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே உடன் இணைந்துள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி.