ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றுள்ளன.
41 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் நைஜீரியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற நைஜீரியா அணி உலக கிரிக்கெட் வரலாற்றில் முழுநேர கிரிக்கெட் நாடை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
மழை காரணமாக நைஜீரியா விளையாடிய சமோவா அணியுடனான முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பலம்வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொண்டு இன்று விளையாடியது.
வளர்ந்துவரும் கிரிக்கெட் நாடுகளில் ஒன்றான நைஜீரியா, முழுநேர கிரிக்கெட் நாடான நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழை காரணமாக ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், நைஜீரியா அணி முதலில் விளையாடி 13 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில் 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து யு19 மகளிர் அணி, 13 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற நைஜீரியா அணி கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் வெற்றியை பதிவுசெய்தது. இது வளர்ந்துவரும் கிரிக்கெட் நாடான நைஜீரியாவிற்கு பெரிய உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் தங்களுடைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்திருக்கும் இந்தியா, நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் தொடரை நடத்தும் நாடான மலேசியாவை எதிர்கொள்கிறது.