டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளம்வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை கனடாவின் தொடக்க வீரர் யுவராஜ் சாம்ரா படைத்தார். அவர் சதமடித்து சாதனை படைத்தபோதும், நியூசிலாந்து அணி, கனடாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. பிற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், டி பிரிவில் நியூசிலாந்து அணியும் கனடா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கனடா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அவ்வணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் யுவராஜ் சாம்ரா அதிகபட்சமாக 65 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 110 ரன்கள் குவித்தார்.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அவ்வணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 59* ரன்களும், கிளென் பிலிப்ஸ் 76* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 பிரிவையும் எட்டியது. முன்னதாக, கனடா வீரர் யுவராஜ் சாம்ரா 58 பந்தில் சதமடித்தார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சதமடித்த இளம்வயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 19 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு 22 வயதில் பாகிஸ்தான் வீரர் அகமது ஷெசாத் சதமடித்ததே சாதனையாக இருந்தது. இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 23 வயதில் சதமடித்திருந்தார். மேலும், ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் ஒரு அசோசியேட் நாட்டிலிருந்து சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் யுவராஜ் சாம்ரா பெற்றுள்ளார்.