mumbai won 2024 ranji trophy
mumbai won 2024 ranji trophy X
கிரிக்கெட்

48 பைனல்களில் 42வது வெற்றி.. விதர்பா அணியை வீழ்த்தி ரஞ்சிக்கோப்பையை வென்றது மும்பை அணி!

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பையின் 89வது சீசனானது கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. 38 அணிகள் மோதிய மோதலில் தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்தியப் பிரதேசம் முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. பரபரப்பான அரையிறுதி மோதலில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணியும், மத்தியப் பிரதேச அணியை வீழ்த்தி விதர்பா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

கோப்பை வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மார்ச் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த விதர்பா அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

முதல் இன்னிங்ஸ் to நான்காவது இன்னிங்ஸ்! என்ன நடந்தது?

விதர்பா அணியின் அசத்தலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 111 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் அடிக்க, ஒரு வழியாக 224 ரன்கள் என்ற டீசண்டான ஸ்கோரை எட்டியது மும்பை அணி.

Shardul Thakur

மும்பையை அடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா அணி, மும்பை பவுலர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

குல்கர்னி

119 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணியில், கேப்டன் ரஹானே 73 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் அடித்து மிரட்ட, இறுதிவரை நிலைத்து நின்று விளையாடிய இளம் வீரர் முஷீர் கான் 136 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியாக வந்த ஷாம்ஸ் முலானி 50 ரன்கள் அடிக்க 418 ரன்களை குவித்தது மும்பை அணி.

சச்சின் - முஷீர் கான்

537 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், விதர்பா அணிக்கு வெற்றி இலக்காக 538 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணியில் மூத்த வீரர் கருண் நாயர் மற்றும் கேப்டன் அக்சய் வாத்கர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 223 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என நல்ல நிலையில் இருந்த விதர்பா அணியை, கருண் நாயரை 74 ரன்னில் வெளியேற்றிய முஷீர் கான் முக்கியமான விக்கெட்டை எடுத்துவந்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் அக்சய் 102 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற, இறுதியில் போராடிய ஹர்ஸ் துபே 65 ரன்களில் வெளியேறினார்.

முடிவில் 368 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த விதர்பா அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

48 பைனல்களில் விளையாடி 42 கோப்பைகளை குவித்த மும்பை!

2024 ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்திய மும்பை அணி தங்களுடைய 42வது ரஞ்சிக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதுவரை 48 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி 42 முறை வெற்றியும், 6 முறை மட்டுமே தோல்வியையும் சந்தித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 15 முறை தொடர்ச்சியாக ரஞ்சிக்கோப்பையை வென்ற பெருமையையும் மும்பை அணி தன்வசம் வைத்துள்ளது.