Mujeeb Catch missing moment and Glenn maxwell
Mujeeb Catch missing moment and Glenn maxwell Twitter
கிரிக்கெட்

AFG v AUS | ஒரேயொரு கேட்ச் மிஸ்.. ஒட்டுமொத்த ஆட்டமும் க்ளோஸ்..! திருப்புமுனையாக அமைந்த அந்த ஓவர்!

Rajakannan K

292 ரன்கள் இலக்கு.. அப்பொழுது ஆஸ்திரேலியா 100 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கிட்டதட்ட ஆட்டம் முடிந்துவிட்டது என்றே எல்லோரும் நினைத்தார்கள். 34 பந்துகளில் 27 ரன்களுன் களத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்தார் க்ளென் மேக்ஸ்வெல். துணையாக கேப்டன் பேட் கம்மின்ஸ். மேக்ஸ்வெல் விக்கெட்டை தூக்கிவிட்டால் போதுமானது. 21 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் என்ற நிலையில், 22 ஆவது ஓவரை வீச வந்தார் நூர். இந்த ஓவர் தான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை அமையப்போகிறது என்பது ஆப்கான் வீரர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை.

முதல் பந்து டாட் ஆக, இரண்டாவது பந்தை ஸ்டம்புக்கு நேராக வீசினார் நூர். பந்து பேட்டை தாண்டி பேடில் பட எல்லோரும் எல்.பி.டபிள்யூ விக்கெட் கேட்டு ஓங்கி கத்தினார்கள். அம்பயரும் விக்கெட் கொடுத்தேவிட்டார். 8 விக்கெட் காலி.. இன்னும் சில நிமிடங்களில் போட்டியே முடிந்துவிடும்.

ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயம் நொறுங்கியேவிட்டது. மேக்ஸ்வெல்லாலும் இதனை நம்ப முடியவில்லை. நிச்சயம் அது விக்கெட் என்றே நினைத்தார். ஆனாலும், தன்னுடைய திருப்திக்காக ரிவிவ்யூ கேட்டார். ரிவிவ்யூ கேட்டாரே தவிர நம்பிக்கையில்லாமல் களத்தை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானார்.

கொஞ்ச தூரம் நடந்தேவிட்டார். ரிப்ளேவில் பந்து பேட்டில் படவே இல்லை. அதனால் நிச்சயம் அவுட் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆப்கன் வீரர்கள் மத்தியிலும் எல்லையில்லா மகிழ்ச்சி. ஆனால், சற்று நேரத்தில் அது அதிர்ச்சியாக மாறியது. பந்து ஸ்டம்பில் படாமல் சற்று மேலே சென்றுவிடுகிறது. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

இவ்வளவு கீழாக வந்த பந்து எப்படி ஸ்டம்பை தகர்க்கவில்லை. நம்பவே முடியவில்லை. ஆனால், அதுதான் டெக்னாலஜி சொல்கிறது. நம்பாமலும் இருக்க முடியாதே. மேக்ஸ்வெல் உயிர் பெற்று மீண்டும் வந்தார். இன்னும் போட்டியில் உயிர் இருந்தது என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு பந்துகளில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மூன்றாவது பந்தில் வெயிட் மூலம் 5 ரன்கள் கொடுத்தார். அதற்கான அடுத்த பந்தில் 2 ரன்கள், நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி என ரன்கள் வந்து சேர்ந்தது.

அடுத்து நூர் வீசிய பந்துதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்பு முனை. ஆப்கான் தங்கள் வெற்றியை கோட்டை விட்ட தருணம் அப்பொழுதுதான் நடந்தது. இந்தப் போட்டியின் வெற்றியை மட்டுமல்ல, அரையிறுதிக்கான வாய்ப்பையும் கிட்டதட்ட பறிகொடுத்த தருணம் அது.

நூர் வீசிய அந்த பந்தை லெக் சைடில் லாவகமாக தூக்கி அடித்தார் மேக்ஸ்வெல். ஸ்கெயர் லெக்கில் முஜீப் உர் ரஹ்மான் நின்று கொண்டிருந்தார். அவரை தாண்டி பந்து சென்றால் நிச்சயம் பவுண்டரி என நினைத்து மேக்ஸ்வெல் அந்த ஷாட்டை அடித்திருக்கக் கூடும். ஆனால், அந்த பந்து முஜீப்க்கு நேராக கைகளுக்கே சென்றது. ஆனால், முஜீப் ஒரு நிமிடம் சென்னை 28 பிரேம்ஜியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். ஆம், கைக்கு வந்த அழகான, அற்புதமாக கேட்சை கோட்டை விட்டுவிட்டார் முஜீப்.

அது எவ்வளவு பெரிய தவறு என்பது அவர்களுக்கு அப்பொழுது பெரிதாக புரிந்திருக்க வாய்ப்பில்லை. 7 விக்கெட் சரிந்துவிட்டது. இன்னும் எடுக்க வேண்டிய ரன்கள் 175-க்கு மேல் இருக்கிறது.

எப்படியும் விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், அதுதான் ஆப்கான் அணி செய்த மிகப்பெரிய தவறு என்பதை தன்னுடைய பிக் ஷோ மூலம் உணர்த்திவிட்டார் க்ளென் மேக்ஸ்வெல். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

தனக்கு அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் கொஞ்சம் கூட பிசகாமல் பயன்படுத்திக் கொண்டார் மேக்ஸ்வெல். ஏனெனில் அதன் பிறகு ஆப்கான் வீரர்களுக்கு அவர் வாய்ப்பையே கொடுக்கவில்லை. துல்லியமாக கேப் பார்த்து, தோதான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டே இருந்தார். 46.5 ஓவரில் ஆட்டத்தையே முடித்துவிட்டார். இரட்டை சதத்தையும் கடந்து எல்லோரது வாயையும் பிளக்க வைத்தும்விட்டார்.

உண்மையில் பலரும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறப்போகிறது என்று நினைத்திருப்பார்கள். பேட்டிங்கிலும் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 292 ரன்கள் என்ற கடினமான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச ரன் சேஸ் என்பதே 287 தான்.

1996 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்து இருந்தார்கள். அதனால், ஆஸ்திரேலியா நிச்சயம் இந்த ரன்களை கடக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. அதற்கு தகுந்தாற்போல், விக்கெட்டுகளையும் மளமளவென சாய்த்து இந்த சீசனில் நாங்களும் பிரதான் டீம் தான் என்று சொல்லி அடித்தார்கள் ஆப்கான் வீரர்கள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல், ஆப்கான் வீரர்களின் கைகளிலேயே தவழ்ந்த வெற்றியை ஒரே ஒரு ஓவரில் போட்டு உடைத்துவிட்டார்கள். நிச்சயம் முஜீப் ரஹ்மான் இதற்காக நிறைய வருத்தப்படுவார். இரவு நேரத்தில் ஆட்டத்தின் பின்பகுதி பனி காரணமாக பந்து சுழலவில்லை என்பது போன்ற காரணங்கள் இருக்கவே செய்தாலும், ஆட்டத்தை முடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்டு கண்ணீரில் மூழ்கி கிடக்கிறார்கள் ஆப்கான் வீரர்கள். அந்நாட்டு ரசிகர்களும்தான்...!