இளையோர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது.
இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி சிலியின் சாண்டியாகோவில் உள்ள ஜூலியோ மார்டினெஸ் பிரடானோஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆச்சர்யமளிக்கும் வகையில் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அணிகளை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆப்ரிக்க நாட்டு அணியான மொராக்கோ. இறுதிப்போட்டியில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியை எதிர்த்து மொராக்கோ விளையாடியது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் அர்ஜென்டினாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தங்கள் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது மொராக்கோ.
அவ்வணியின் நட்சத்திர வீரர் யாசிர் சப்ரினி 12 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2009-இல் கானா வென்றதற்குப் பிறகு இப்பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோவே ஆகும். முன்னதாக, சில மாதங்களுக்குப் பிறகு, TotalEnergies CAF U-20 ஆப்பிரிக்கா கோப்பைப் போட்டியில் மொராக்கோ அணி இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, தற்போது U20 பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.