ரவி சாஸ்திரியை இங்கிலாந்து கோச் ஆக்கவேண்டும் என சொன்ன முன்னாள் இங்கிலாந்து வீரர் web
கிரிக்கெட்

ரவி சாஸ்திரியை இங்கிலாந்து COACH ஆக்குங்க.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதான் வழி! - முன்னாள் ENG வீரர்

ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வுசெய்யப்படவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் கூறியுள்ளார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்ல இங்கிலாந்து அணிக்கு ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய சாஸ்திரி, இங்கிலாந்து அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘பாஸ்பால்’ என்ற அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்குள் எடுத்துவந்தார் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம். இந்தசூழலில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி, 15 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை அதிகரித்தது.

ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடர் தொடங்கிய 11 நாட்களிலேயே 0-3 என தோற்று தொடரை இழந்துள்ளது. ’பாஸ்பால்’ அணுகுமுறையால் இங்கிலாந்து அணி சொல்லிக்கொள்ளும் அளவு எந்த வெற்றியையும் பெறவில்லை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் கூட வரவில்லை.

பென் ஸ்டோக்ஸ்

இந்தசூழலில் தான் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான மெக்கல்லம் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விரைவில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக வேறு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனவும், அதற்கு ரவி சாஸ்திரி சரியான தேர்வாக இருப்பார் என்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் பனேசர் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி இங்கிலாந்து கோச்சாக வேண்டும்..

ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி 2018 மற்றும் 2020 சுற்றுப்பயணத்தின் போது இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அதிலும் 2020 தொடரில் 36 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியடைந்த இந்திய அணி மீண்டுவந்து 2-1 என தொடரை வென்று ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தது. அப்போது அணியில் இளம்வீரர்களை மட்டுமே வைத்து அந்த வெற்றியை சாதித்திருந்தார் ரவிசாஸ்திரி.

இந்தசூழலில் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்லவேண்டுமானால் ரவி சாஸ்திரி இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என மோண்டி பனேசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்திய உரையாடலில் பேசுகையில், ”இந்த தோல்விக்கு பிறகாவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது எப்படி என யாருக்கு தெரியும்? ஆஸ்திரேலியாவின் பலவீனங்களை சரியாக பயன்படுத்தி அதற்கேற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களை தயார்படுத்தி வெல்லவேண்டும். அதை யார் சரியாக செய்வார்கள் என யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்து ரவி சாஸ்திரியை இங்கிலாந்தின் பயிற்சியாளராக நியமித்தால் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியால் தோற்கடிக்க முடியும்” என கூறியுள்ளார்.