mohit ulva bcci
கிரிக்கெட்

’அந்த பையனுக்கு பயம் இல்ல..’ ஒரே போட்டியில் ஹீரோவான மோஹித் உல்வா.. IPL அணிகளின் டார்கெட் இவர்தான்!

10வது வீரராக களத்திற்கு வந்து ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் இறுதிவரை மனதிடத்துடன் நின்று கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றிபெறுவதெல்லாம் ஆகச்சிறந்த ஆட்டமாகும்.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில், கடைசி 6 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் உல்வா தனது தைரியமான ஆட்டத்தால் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 26 பந்தில் 49 ரன்கள் அடித்து, இந்திய அணியின் ஹீரோவாக மாறியுள்ளார்.

ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் வெற்றிக்காக போராடும் குணத்தை மகேந்திர சிங் தோனி இந்திய ரசிகர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து பென் ஸ்டோக்ஸின் டெஸ்ட் இன்னிங்ஸ் பல கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பக்கூடிய ஆட்டமாகும். அந்தவரிசையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் மோஹித் உல்வா.

அவரின் இன்றைய ஆட்டத்தை என்னவென்று சொல்லி விவரிப்பது. பாகிஸ்தானுடன் லீக் போட்டியில் தோற்றதே மிகப்பெரிய அழுத்தத்திற்கு தள்ளியிருக்கும், இதில் இறுதிப்போட்டியில் மீண்டும் அதே பாகிஸ்தான். கடந்தமுறை இந்தியாவை வீழ்த்தியிருந்ததால், அதே நம்பிக்கையில் களம்கண்ட பாகிஸ்தான் 338 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.

337 ரன்களை பாகிஸ்தான் அடித்தபோது இந்தியா வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. அதிலும் ஆர்யவீர் சேவாக், லக்‌ஷயா இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு விக்கெட்டுகளை சரியவிட்ட இந்தியா 252 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8 ஓவர் தான் இருக்கிறது 80 ரன்களுக்கு மேல் இந்தியாவிற்கு தேவை, ஆனால் பாகிஸ்தான் வெல்ல 2 விக்கெட் வீழ்த்தினால் போதும் என்ற நிலையில் இந்தியா வெற்றிக்கு அருகாமையில் கூட இல்லை.

இப்படியான கடினமான சூழலில் 10வது வீரராக களமிறங்கிய ஒரு வீரர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இறுதிப்போட்டியில் அணியை மீட்டுக்கொண்டுவருவதெல்லாம் திறமையின் உச்சம். அதைசெய்து காட்டினார் இந்தியாவின் இளம் ரத்தம் மோஹித் உல்வா. 3 பிரமாண்ட சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என 26 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்ற உல்வா, இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

கடைசி 6 பந்துக்கு 8 ரன்கள் தேவையென்ற நிலையில், பாகிஸ்தான் பவுலர் சிறப்பாக பந்துவீசி 5 பந்துக்கு 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 1 பந்துக்கு 3 ரன்கள் தேவையென்ற இடத்தில் டிராக்கில் தைரியமாக இறங்கிவந்து ஸ்பின்னரின் லெந்தை மாற்ற நிர்பந்தித்த உல்வா, வந்த லெந்த் பாலை கடுமையாக தாக்கினார். இடியென இறங்கிய அவருடைய ஷாட் அதை பவுண்டரிக்கு அழைத்துச்சென்றது. என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு போட்டி! இந்தியா கையில் இல்லாத போட்டியை உல்வாவின் உதவியால் எடுத்துவந்து வரலாற்று வெற்றியாக மாற்றியது!