’உயிரே போனாலும் பாகிஸ்தானிடம் தோற்காத’ கடைசிபந்து வரை போராடிய இந்தியா! 1 விக்கெட்டில் த்ரில் வெற்றி!
19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை கடைசி பந்தில் 1 விக்கெட்டில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. கடைசி நேரத்தில் மோஹித் உல்வா மற்றும் சிகுருபதி வெங்கடா சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை தந்து, பாகிஸ்தானிடம் தோல்வி அனுபவித்த லீக் போட்டியின் பழியை தீர்த்தனர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பைத் தொடர் கடந்த நவம்பர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, நேபாள், பாகிஸ்தான், யுஏஇ, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடின.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியாவை லீக் போட்டியில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்றது. பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும் மற்ற அணிகளையெல்லாம் வீழ்த்திய இந்தியாவும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவும், இறுதிப்போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வெல்ல வேண்டும் என்ற முடிவில் பாகிஸ்தானும் களம்கண்டன.
பரபரப்பாக தொடங்கிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கி 11 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசிய உஸ்மான் கான் சதமடித்து அசத்தினார்.
338 ரன்கள் என்ற இமாலய டோட்டலை பாகிஸ்தான் குவித்தாலும், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆர்யவீர் சேவாக் மற்றும் கேப்டன் லக்ஷய ராஜேஷ் இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் 58, 80 ரன்கள் என அடித்து வெளியேற தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவருமே 100 ஸ்ட்ரைக்ரேட்டுக்கு கீழ் குறையாமல் விளையாடி ரன்வேகத்தை வீழாமல் பார்த்துக்கொண்டனர்.
7வது வீரராக களமிறங்கிய மனல் சௌஹான் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 32 பந்தில் 47 ரன்கள் அடித்து அசத்தினார். வீழ்ந்த ரன்ரேட்டை மனல் சௌஹான் உயர்த்திவிட, 10வது வீரராக களமிறங்கிய மோஹித் உல்வா 200 ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடி பாகிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
ஒருபக்கம் என்னதான் இந்தியா ரன்களாக அடித்தாலும் மறுபக்கம் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் விக்கெட்டுகளாக வீழ்த்திக்கொண்டே இருந்தது. கடைசி 2 ஓவருக்கு 25 ரன்கள் அடித்தால் இந்தியாவுக்கு வெற்றி, 1 விக்கெட்டை வீழ்த்தினால் பாகிஸ்தானுக்கு வெற்றி என ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்தது.
ஆனால் 19வது ஓவரில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்ட மோஹித் உல்வா அழுத்தமான நேரத்திலும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர்தான் அடிக்கிறார் என்றால் 11வது வீரராக களமிறங்கிய சிகுருபதி வெங்கடவும் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.
கடைசி 6 பந்துக்கு 8 ரன்கள் என இருக்க முதல் 5 பந்திலும் 5 ரன்களை மட்டுமே அடித்தது இந்தியா. கடைசி 1 பந்துக்கு 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருக்க, இறுதிப்பந்தை எதிர்கொண்ட மோஹித் உல்வா அதை பவுண்டரியாக மாற்ற இந்தியா 1 விக்கெட்டில் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது. லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றபோதே இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்தசூழலில் தான் உயிரே போனாலும் பாகிஸ்தானிடம் கோப்பையை இழக்கக்கூடாது என 11 வீரர்களும் விளையாடியது போல இருந்தது. வெற்றியை பதிவுசெய்த அந்த தருணம் இந்திய வீரர்கள் ஆக்ரோசத்தில் கத்தியது, அவர்களுக்கு இந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியது. வாழ்த்துக்கள் இளம் சாம்பியன்ஸ்!

