Mohammed Siraj
Mohammed Siraj  PTI
கிரிக்கெட்

பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கி ரசிகர்களின் இதயங்களை வென்ற முகமது சிராஜ்!

Rishan Vengai

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற்றது. முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் பின்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மைதானங்களில் பகுதி பகுதியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் இது மழைக்காலம் என்பதால் ஒவ்வொரு போட்டியின் போதும் மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்தது.

Ind vs Pak

இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் முடிவை எட்டுமளவுக்கு மைதானத்தின் பராமரிப்பு ஊழியர்கள் கடினமாக உழைத்தனர். சில நேரங்களில் எல்லாம் 10 நிமிடங்கள் மட்டுமே மழை இருக்கும், உடனேயே சென்றுவிடும். பின்னர் மீண்டும் அரைமணி நேரம் கழித்து இடையூறு செய்யும். அப்போதெல்லாம் கவர்களை கொண்டு மைதானத்தை மூடுவதும், பின் உடனேயே எடுத்துச்செல்வதுமாக தங்களுடைய கடினமான உழைப்பை மைதான ஊழியர்கள் போட்டனர். ஊழியர்களின் உழைப்பை இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பாராட்டி இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதுக்கான தொகையை மைதான ஊழியர்களுக்கு வங்கிய சிராஜ்!

2023 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ் இலங்கை அணியை 50 ரன்களில் சுருட்ட பெரும்பங்கு வகித்தார். 51 ரன்களை 6.1 ஓவரில் எட்டிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசியக்கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்த முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

முகமது சிராஜ்

ஆட்டநாயகன் விருதை வென்ற முகமது சிராஜ் சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் வென்றுவிட்டார். பிரசன்டேசனில் முகமது சிராஜ் பேசியதற்கு பிறகு அனைத்து இந்திய அணி வீரர்களும் அவர்களுடைய கைகளை தட்டியவாறே இருந்தனர். போட்டிக்கு பிறகு பேசிய சிராஜ், “நீண்ட நாட்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறேன். நடுவில் என்னுடைய சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. அதை இந்த போட்டியில் வெளிக்கொண்டுவந்து என்னுடைய சிறந்த ஸ்பெல்லை வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பரிசுத்தொகையை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்குகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த போட்டி நடந்திருக்காது. என்னைவிட சிறப்பாக செயல்பட்டவர்கள் அவர்கள் தான்” என்று பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட 4.15 லட்சம் ரொக்கத்தொகையை சிராஜ் மைதான ஊழியர்களுக்கு வழங்கியிருக்கும் அதே வேளையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இரண்டும் சேர்ந்து 50,000 அமெரிக்க டாலர் ரொக்கத்தை கொழும்பு மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. மைதான ஊழியர்களின் உழைப்புக்கு 41 லட்சம் தொகையை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த ஜெய் ஷா, “ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (SLC) இணைந்து கொழும்பு மற்றும் கண்டியில் சிறப்பாக செயல்பட்ட மைதான வீரர்களுக்கு USD 50,000 பரிசுத் தொகையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றன. அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் 2023 ஆசிய கோப்பையை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது” என்று தெரிவித்துள்ளார்.