முகமது ஷமி
முகமது ஷமி Cricinfo
கிரிக்கெட்

"பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமென்றால்.. ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்!" - முகமது ஷமி!

Rishan Vengai

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறந்த வேகப்பந்துவீச்சை (7/57) பதிவுசெய்த முகமது ஷமி, வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை (24 விக்கெட்டுகள்) கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தினார்.

இந்நிலையில், 2023 உலகக்கோப்பையில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டை வீழ்த்திய பிறகு முட்டிப்போட்டு தரையில் கைவத்தது போலான கொண்டாட்டத்தால் ட்ரோல் செய்யப்பட்டது. அவர் பிரார்த்தனை செய்வது போல் சென்றுவிட்டு, பின்னர் பின்விளைவுகளால் பாதிக்கப்படலாம் என பயந்து பின்வாங்கிவிட்டதாக ஒரு தரப்பு விமர்சனம் செய்தது.

இந்த சம்பதுக்கு முன்னர் தான், “பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் மைதானத்திலேயே பிரார்த்தனை செய்ததும், அதற்கு ஜெய் ஸ்ரீராம் என பல இந்திய ரசிகர்கள் முழக்கமிட்டதும்” பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இதுபோன்ற சூழலில் தான் பாகிஸ்தான் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முகமது ஷமியை டார்கெட் செய்து ட்ரோல் செய்தன.

தற்போது அந்த சர்ச்சைக்குரிய விமர்சனம் குறித்து பேசியிருக்கும் முகமது ஷமி, ஒரு இந்திய முஸ்லிமாக நான் பிரார்த்தனை செய்வதற்கு யாருடைய அனுமதியையும் பெற தேவையில்லை என கூறியுள்ளார்.

பிரார்த்தனை செய்ய விரும்பினால் என்னை யாரால் தடுக்க முடியும்!

சர்ச்சைக்குரிய விமர்சனத்தால் ஆவேசமடைந்த முகமது ஷமி, “நான் பிரார்த்தனை செய்ய நினைத்தால் என்னை யாரால் தடுக்க முடியும். நான் யாருடைய பிரார்த்தனையும் தடுத்து நிறுத்த மாட்டேன், அதேபோல் நான் பிரார்த்தனை செய்ய நினைத்தால் செய்வேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

நான் ஒரு முஸ்லிம் என்பதை பெருமையுடன் கூறுவேன், அதேபோல் நான் ஒரு இந்தியன் என்பதையும் என்று பெருமிதத்துடன் கூறுவேன். பிரார்த்தனை செய்வதற்கு ஒருவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்?” என ஆவேசமாக கூறியுள்ளார்.

shami

மேலும், “இதற்கு முன்பும் நான் 5 விக்கெட்டை எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவர்கள் கூறுவதுபோன்று பிரார்த்தனை செய்திருக்கிறேனா? நான் பலமுறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன்" என்று ஆஜ் தக் உடன் ஷமி கூறியுள்ளார்.

இதனால் தான் முட்டிப்போட்டு கைகளை தரையில் வைத்தேன்! உண்மையை உடைத்த ஷமி!

இலங்கைக்கு எதிரான குரூப் போட்டியில் 200 சதவீத தீவிரத்துடன் பந்துவீசியதாகவும், சோர்வாக இருந்ததால் தான் தரையில் கைவைத்து முட்டிப்போட்டதாகவும் ஷமி சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் பேசியிருக்கும் அவர், "இதுபோன்ற சர்ச்சைகளை பரப்புகிறவர்கள் யார் பக்கமும் இல்லை, அவர்கள் ஒரு குழப்பத்தை மட்டுமே உருவாக்க விரும்புகிறார்கள். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது நான் 200 சதவீத தீவிரத்துடன் பந்துவீசினேன். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, 5வது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எவ்வளவு முறை முயற்சித்தும் பேட்ஸ்மேன்களின் பேட்டில் பட்டு பந்து சென்றும் விக்கெட் கிடைக்காததால் சோர்வாக இருந்தேன்.

முகமது ஷமி

தொடர்ந்து முழு வீச்சில் பந்துவீசியபோது 5வது விக்கெட் கிடைத்ததும் தரையில் கைவைத்து முட்டிப்போட்டேன். இதற்கான சரியான அர்த்தத்தை பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால் இந்த சம்பவத்தை தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு வேறு வேலையில்லை என்று நினைக்கிறேன்" என ஷமி மேலும் கூறினார்.