இந்த 3 இந்திய ஸ்பின்னர்கள் சேர்ந்தால் இங்கிலாந்தை சிதைத்துவிடுவார்கள்! - எச்சரிக்கும் மைக்கேல் வாகன்

அடுத்த வருடம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
ind vs eng
ind vs engX

இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. பாஸ்பால் அணுகுமுறைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியை காட்டிவரும் இங்கிலாந்து அணி, இந்தியாவின் தரமான ஸ்பின் அட்டாக்கிற்கு எதிராக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. பிரண்டென் மெக்கல்லம் டெஸ்ட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றபிறகு இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையில் கலக்கி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் பாஸ்பால் ஆட்டமுறை வெற்றிபெறுமா என பென் ஸ்டோக்ஸ் இடம் கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த ஸ்டோக்ஸ், “நியூசிலாந்து அணியை நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தபோது, மற்றவர்கள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, உங்களால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இதை செய்ய முடியாது என கூறினார்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் நாங்கள் வென்றபோது, பாகிஸ்தானுக்கு எதிராக செய்ய முடியாது எனக்கூறினார்கள். பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செய்யமுடியாது எனக்கூறினார்கள். அனைத்திலும் நாங்கள் வெற்றிபெற்றோம். தற்போது இந்தியாவுக்கு எதிராக செய்யமுடியுமா என்று கேட்கிறார்கள், யாருக்குத் தெரியும் காலம்தான் அதற்கு பதில் சொல்லும்” என்று கூறினார்.

Ben Stokes
Ben StokesTwitter

இந்நிலையில்தான் தற்போது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமாக 3 அறிமுக வீரர்களோடு இந்தியா வருகிறது இங்கிலாந்து அணி. இதற்கிடையில்தான் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணியை எச்சரித்துள்ளார்.

இந்தியா தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.

அஸ்வின், ஜடேஜா, அக்சர் சேர்ந்தால் இங்கிலாந்து காலி! - மைக்கேல் வாகன்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் மைக்கேல் வாகன், “உலகத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு கடினமான இடம் என்றால் அது இந்தியாதான். நீங்கள் ஆஷஸ் தொடரை எடுத்துக்கொண்டால் அங்கு ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னரான நாதன் லயன் சிறப்பாக பந்துவீசினார். அவருடைய அபாரமான பந்துவீச்சால் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் காயம் காரணமாக நாதன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காததால் இங்கிலாந்து அணி எப்படியோ 2-2 என தொடரை சமன்செய்தது.

மைக்கேல் வாகன்
மைக்கேல் வாகன்

ஆனால் அங்கு ஒரே ஒரு ஸ்பின்னராக நாதன் லயன் மட்டும்தான் இருந்தார். இந்தியாவை எடுத்துக்கொண்டால் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் என 3 தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இந்த 3 ஸ்பின்னர்களையும் இந்தியா ஆடவைத்தால், இங்கிலாந்து அணியை நிச்சயம் சிதைத்துவிடுவார்கள். ஆனால் எப்படி இருப்பினும் இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட்டை பின்வாங்க மாட்டார்கள் என நம்புகிறேன். இங்கிலாந்து அணி விளையாடும் விதத்தை மாற்றாமல் இந்தியாவில் முயற்சி செய்து சாதிக்கும் என நம்புகிறோம். இந்த மோதல் நிச்சயம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கப்போகிறது” என்று மைக்கேல் வாகன் ஃபாக்ஸ் கிரிக்கெட்டிடம் கூறியுள்ளார்.

அக்சர் பட்டேல் - அஸ்வின்
அக்சர் பட்டேல் - அஸ்வின்

கடந்த முறை இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி 3-1 என டெஸ்ட் தொடரை கைவிட்டது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றபோதும், அந்த அணியால் தொடரில் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. காரணம் அங்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 32 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com