virat kohli - mitchell starc web
கிரிக்கெட்

’இதனால தான் இவங்க 2 பேரும் லெஜெண்டா இருக்காங்க..’ கோலியை போலவே பேசிய ஸ்டார்க்!

இடதுகை வேகப்பந்துவீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க், சாதனைக்குபிறகு கோலியை போலவே பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது..

Rishan Vengai

ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க் தனது அசத்தலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை திணறடித்துள்ளார். 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த ஸ்டார்க், அக்ரமின் திறமையை பாராட்டியுள்ளார். இதேபோல, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தபோது கோலியும் தனது ஹீரோவுக்கு மரியாதை செலுத்தியதை ரசிகர்கள் நினைவுகூர்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட் போன்ற நட்சத்திர பவுலர்கள் இல்லாதபோதும் மிட்செல் ஸ்டார்க் தனியாளாக இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்துள்ளார்..

mitchell starc

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க், கப்பாவில் பிங்க்-பால் டெஸ்ட்டாக நடந்த இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்..

கடந்த இரண்டு போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்தார் மிட்செல் ஸ்டார்க்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்ற வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார்.. 102 டெஸ்ட்களில் விளையாடி 414 விக்கெட்டுகளை வாசிம் அக்ரம் வீழ்த்தியிருந்த நிலையில், 102 டெஸ்ட்களில் விளையாடி 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்..

இந்தசூழலில் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பிறகு பேசிய ஸ்டார்க், “வாசிம் அக்ரம் என்னை விட சிறந்த வேகப்பந்துவீச்சாளர், அவர் தான் இதுவரை விளையாடிய பவுலர்களிலேயே உச்சத்தில் நிற்கிறார். நான் இன்னும் அவருக்கு நிகரான பவுலராக மாறவில்லை” என தெரிவித்தார்..

இதேபோலான ஒரு பதிலை சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடித்த பிறகு கோலியும் கூறியிருந்தார்.. அப்போது பேசிய கோலி, “என்னுடைய ஹீரோவின் சாதனையை கடப்பது எனக்கும் மிகவும் சிறந்த உணர்வை கொடுக்கிறது.. ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகவும் முழுமையான பேட்ஸ்மேன் என்றால் எப்போதும் அவர்தான், அவரை என்னால் ஒருபோதும் முந்த முடியாது” என்று பேசியிருந்தார்.

மிட்செல் ஸ்டார்க் மற்றும் விராட் கோலி இருவரும் எவ்வளவு பெரிய மைல்கல்லை எட்டினாலும் இன்னும் அவர்களுடைய ஹூரோக்களுக்கு மரியாதை செலுத்திவருவதை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்..