அஹமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் தூக்கி நிறுத்திய மணிப்பூர் சிம்மமான மீராபாய் சானு தங்க வேட்டையை மீண்டும் தொடங்கியிருக்கிறார். அஹமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அவர் அசத்தியுள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க நாயகியான மீராபாய் சானு, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடம்பிடித்தார். அதன்பின்னர் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு வருட காலமாக சர்வதேசப் போட்டிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் காமன்வெல்த் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் அவர் கலந்து கொண்டார்.
இதில், எடையை நேரடியாக தலைக்கு மேல் தூக்கும் ஸ்நாட்ச் முறையில் 84 கிலோ, கழுத்துப் பகுதியில் நிறுத்தி பின் தலைக்கு மேல் தூக்கும் க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு முதலிடம் பிடித்தார். இதன்மூலம், கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். மறுபுறம், இந்தியாவின் சுனில் டால்வி 177 கிலோ (76 கிலோ ஸ்னாட்ச் + 101 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க்) தூக்கி வெண்கலப் பதக்கத்தையும், நைஜீரியாவின் ரூத் அசோகுவோ நியோங் 167 கிலோ (72 கிலோ + 95 கிலோ) தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
வெற்றி குறித்து மீரா பாய் சானு, "அகமதாபாத்தில் தங்கப் பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு ஒரு வருடம் கழித்து சொந்த மண்ணில் போட்டியிடுவது இந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது. மேலும் ரசிகர்கள் கூட்டத்தின் ஆதரவு என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றி இடைவிடாத கடின உழைப்பு, எனது பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் நாட்டின் தொடர்ச்சியான ஊக்கத்தின் விளைவாகும். அக்டோபரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பிற்கு நான் தயாராகி வருவதால் இது எனக்கு ஒரு நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் நான் தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் பிரிவில், தேசிய விளையாட்டு சாம்பியனான ரிஷிகாந்த சிங், ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் தங்கம் வென்று பிரகாசித்தார், இதில் ஸ்னாட்ச் பிரிவில் 120 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 151 கிலோ மொத்தம் 271 கிலோ எடை தூக்கினார். இதற்கிடையில், மலேசியாவைச் சேர்ந்த ஐரீன் ஹென்றி மொத்தம் 161 கிலோ எடையுடன் வெள்ளிப் பதக்கத்தையும், வேல்ஸின் நிகோல் ராபர்ட்ஸ் 150 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.