MI, 2026 web
கிரிக்கெட்

தொடர்ந்து 4 தோல்வி.. பரிதாப நிலையில் கடப்பாரை அணி.. தோல்விக்கான 3 காரணங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியையும் சந்தித்து பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் டிகாக் சதம் அடித்தும், மற்ற பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்ததால் 195 ரன்களிலேயே முடங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணி பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தால் 16.3 ஓவரில் இலக்கை எளிதில் துரத்தி வெற்றி பெற்றது.

2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிகளும் மோசமாக விளையாடிவருகின்றன.

குயிண்டன் டிகாக் - 2026

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சொந்தமண்ணில் மும்பையை எதிர்த்து விளையாடியது பஞ்சாப் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் விளையாடிய மும்பை அணி 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டிகாக் 112 ரன்கள் குவித்தாலும், அவரைச் சுற்றி மற்ற பேட்ஸ்மேன்களால் சோபிக்க முடியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ், 2026

196 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியை பதிவுசெய்தது. பிரப்சிம்ரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் குவித்து அசத்தினர். பந்துவீச்சில் மிரட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

மும்பை அணியில் இருக்கும் பிரச்னைகள் என்ன..?

தொடர்ந்து 4 தோல்வி என்பது மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை சரிசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

பேட்டிங்கில் சொதப்பல் - பேட்டிங்கில் எந்த வீரரும் நிலையாக ரன்குவிப்பதில்லை என்பதும், நல்ல வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதும் அந்த அணியை நல்ல டோட்டல் செட் செய்வதிலிருந்து 20-30 ரன்களை பின்தங்க வைக்கிறது. அதிலும் பேட்டிங் காம்பினேஷனிலும், எந்த வீரரை எங்கு களமிறக்குவது என்பதிலும் மும்பை அணி கோட்டைவிடுகிறது.

MI, 2026

பந்துவீச்சில் சொதப்பல் - அதேபோல பந்துவீச்சிலும் பும்ராவை தவறான இடத்தில் பந்துவீசவைத்து சோதனை செய்வது, அவரையும் பேக் ஃபுட்டில் தள்ளுகிறது. மற்ற பவுலர்கள் தங்களுடைய பவுலிங் பிளானை சரியாக செயல்படுத்த தவறுவது பெரிய பாதகமாக அமைகிறது. ஃபீல்டிங் செட் செய்வதிலும், அதற்கேற்றார் போல் பந்துவீசுவதில் தொடர்ந்து கோட்டைவிடுகின்றனர்.

உதாரணமாக பஞ்சாப் அணியில் ஆஃப் சைடில் சிறப்பாக கட் ஷாடும் பிரப்சிம்ரனுக்கு எதிராக இன்ஸ்விங்கர் போடாமல் ஆஃப் சைடில் பந்துவீசுவதும், அதற்கு நேர் மாறாக பிரியான்ஸ் ஆர்யாவிற்கு இன்ஸ்விங்கர் போடுவதும் என சொதப்புகின்றனர். ஒரு ஃபீல்ட் செட்டிங்கை நிறுத்திவிட்டு அதற்கு ஏற்றார்போல் பந்துபோடாமல், தவறான லெந்தில் பந்துவீசுகின்றனர். இது தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் நடக்கிறது.

கேப்டனின் முடிவுகள் பாதகம் - அதற்கும் மேலாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சில முடிவுகள் அவ்வணியை தோல்வியின் பக்கம் கொண்டு செல்கிறது. உதாரணமாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் படிதாருக்கு எதிரான ஸ்பின்னரை வீசவைத்தது, விராட் கோலிக்கு எதிராக தவறான ஃபீட்ல் செட்டை நிறுத்தியது, நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களை தவறான வரிசையில் களமிறக்கியது. பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யாதது என ஹர்திக் பாண்டியாவின் முடிவுகளும் கேள்விக்குரியாகவே இருந்துவருகின்றன.

ஆன் பேப்பரில் நல்ல அணியை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ், அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்துவிட்டு விரைவில் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றன.