பலாஷ் முச்சல், ஸ்மிருதி இன்ஸ்டா
கிரிக்கெட்

மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய காதலர்.. ஆச்சர்யத்தில் திளைத்த ஸ்மிருதி.. திருமண தேதி அறிவிப்பு!

திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தைப் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தைப் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் அணி உலகக்கோப்பையை வென்ற சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தத் தொடரில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. ஒன்பது இன்னிங்ஸ்களில் 434 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தைப் பரிசளித்துள்ளார், திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல்.

பலாஷ் முச்சல் - ஸ்மிருதி மந்தனா

இதற்காக, உலகக் கோப்பை நடைபெற்ற மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தின் நடுப்பகுதிக்கு கண்களை கட்டி அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய கண்களைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, தரையில் ஒற்றைக்காலை மண்டியிட்டு அவரிடம் காதலைச் சொல்கிறார்.

அப்படியே பரிசாக மோதிரம் ஒன்றையும் நீட்டுகிறார். அது, ஸ்மிருதிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்து மீண்டு அவரும் காதலை ஏற்றுக்கொண்டு அவரை கட்டியணைக்கிறார்.

இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்பிறகு, அவர்களுடைய நண்பர்கள் அவ்விடத்திற்கு வந்து அவர்களை வாழ்த்துகிறார்கள். குறிப்பாக பலாஷின் சகோதரியும், பிரபல பாடகியுமான பலக் முச்சாலும், அந்த இடத்தில் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த ஜோடி, நவம்பர் 23ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஜோடிக்கு, பிரதமர் மோடி தனது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ராதா யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு நகைச்சுவையான ரீல் மூலம் ஸ்மிருதி தனது ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவித்துள்ளார். தவிர, தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் பகிரப்பட்ட வீடியோவில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, ”மந்தனா விரைவில் இந்தூரின் மருமகளாக மாறுவார்” என பலாஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.