canada x page
கிரிக்கெட்

“அந்த வீரர்களை நீக்கக்கூடாது..” மிரட்டிய பிஷ்னோய் கும்பல்.. மரண பயத்தில் கனடா கிரிக்கெட்!

சிபிசியின் 'தி ஃபிஃப்த் எஸ்டேட்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த ஆவணப்படம், கனடா கிரிக்கெட்டின் மூத்த அதிகாரிகள் நிர்வாகம், அணித் தேர்வு மற்றும் பலவற்றில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டுகிறது.

Prakash J

கனடா கிரிக்கெட் அணியை, பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டியிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் சம்பவத்தால், கனடா கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் எனப் பலரும் மரண பயத்தில் உறைந்துபோயிருப்பதுதான் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல், மிகப்பெரிய குற்றப் பின்னணி கொண்டது. மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு விரோதச் செயல்கள் ஈடுபடும் இந்தக் கும்பல், சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்துள்ளனர். குறிப்பாக, இந்தக் கும்பல் உலகம் முழுவதும் உள்ள மாஃபியாக்களுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. அந்த வகையில், கனடாவிலும் இந்த கும்பலுக்குத் தொடர்புடைய மாஃபியாக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கும்பல்தான் கனடா நாட்டு கிரிக்கெட் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ளது. 'ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்' என்ற தலைப்பில் கனடாவில் ஓர் ஆவணப்படம் வெளியானது. சிபிசியின் 'தி ஃபிஃப்த் எஸ்டேட்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த ஆவணப்படம், கனடா கிரிக்கெட்டின் மூத்த அதிகாரிகள் நிர்வாகம், அணித் தேர்வு மற்றும் பலவற்றில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டுகிறது. அதாவது, குறிப்பிட்ட பதவிகளில் உள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் வீரர்களின் தேர்வில் பிஷ்னோய் கும்பலின் செல்வாக்கு இருந்ததாக அது எடுத்துரைக்கிறது.

கனடாவின் தேசிய அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஒரு குறிப்பிட்ட வீரரை கவனித்துக் கொள்ள தவறினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்பட்டதாகக் கூறுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின்போது, அந்த அதிகாரியிடம், ”குறிப்பிட்ட சில வீரர்களை அணியில் இருந்து நீக்கக் கூடாது, அப்படி நடந்தால் உங்கள் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்படும். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டியதாக அது தெரிவிக்கிறது. இதனால் பயந்துபோன அந்த கிரிக்கெட் அதிகாரி போலீஸ் பாதுகாப்பைக் கோரியுள்ளார். மற்றொரு மூத்த அதிகாரியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அவர் தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கும்பலின் அழுத்தத்தால்தான், கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே திடீரென கேப்டன் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கனடா

அனுபவ வீரர் நிக்கோலஸ் கர்டன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தில்பிரீத் பாஜ்வா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் கனடா பங்கேற்ற டி20 போட்டிகள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கிரிக்கெட்டிலும் பயங்கரவாதக் கும்பலின் தலையீடு இருப்பது கிரிக்கெட் உலகைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தால் கனடா கிரிக்கெட் அமைப்பு ஒரு புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. எனினும், இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெல்டா நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.