’கேங்க்ஸ்டர்’ லாரன்ஸ் பிஷ்னோய் - அமெரிக்க Ex கூட்டாளி பிரார் நட்பில் விரிசல்.. கண்காணிக்கும் போலீஸ்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக், கடந்த ஆண்டு இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது பல வழக்குகள் உள்ளன. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அவரது முன்னாள் கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் தங்கள் கும்பல்களுக்கு துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களைத் தேடி வருவதாகவும், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் இந்தக் கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், இப்போதைக்கு பிரார் மற்றும் பிஷ்னோய் பிரிந்ததற்கு ஈகோ மோதல்கள் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும், NDTV-க்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, கோல்டி பிரார் என்கிற சதீந்தர்ஜீத் சிங் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் லாரன்ஸ் பிஷ்னோயிடமிருந்து பிரிந்து செல்வதை தெளிவுபடுத்துகிறார்.
இந்த கிளிப், சர்வதேச குற்றவியல் சிண்டிகேட் இப்போது ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருவதை தெளிவுபடுத்துகிறது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தப் பதிவில், ’அன்மோல் பிஷ்னோய் (லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி) இடுகையிட்ட ஒரு தவறான பதிவு செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. அவர் ஏன் அதை இடுகையிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் இனி அவருடன் பழகுவதில்லை. இந்த விஷயத்தை நாங்கள் அனைத்து சகோதரர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம்" என அதில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோவிற்குப் பிறகு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலின் சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகளில் கோல்டி பிராரின் பெயர் இல்லை. இது இரண்டு கும்பல்களுக்கு இடையேயான பிளவைக் குறிக்கிறது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. ஆதாரங்களின்படி, லாரன்ஸ் கும்பல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட ஆண்களை குறிவைக்கிறது; மேலும் 2017இல் அமெரிக்காவிற்குச் சென்று இப்போது அந்த நாட்டிலிருந்து தனது கும்பலை நடத்தி வரும் கோல்டி பிரார், மெய்நிகர் நேர்காணல்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்.
இவ்விவகாரம் குறித்து டெல்லி காவல்துறையின் முன்னாள் துணை ஆணையர் எல்.என்.ராவ், "இரண்டு கும்பல்கள் பிரிந்தால், முதலில் பிரிக்கப்படுவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் விசுவாசிகள்தான். இது மிகவும் ஆபத்தான கட்டம். ஏனென்றால் இரு தரப்பினரும் இரத்தத்தை நிரூபிக்க விரும்புகிறார்கள். அதாவது, இரத்தம் சிந்துவதன் மூலம் தங்கள் வலிமையைக் காட்ட விரும்புகிறார்கள். மேலும், ஒருவரையொருவர் தங்களை அவமானப்படுத்த விரும்புகிறார்கள். ஆகையால், அடுத்த சில வாரங்களுக்கு போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என அவர் என்.டி.டிவிக்கு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)படி, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலில் சுமார் 700 துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் உள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் தாவூத் இப்ராஹிமைப் போலவே தனது வலையமைப்பை விரிவுபடுத்தி வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.