KL Rahul
KL Rahul Twitter
கிரிக்கெட்

அனைத்து விமர்சனத்திற்கும் சதத்தால் பதிலடி கொடுத்த KL Rahul! கோலியின் சாதனையை சமன் செய்து அசத்தல்!

Rishan Vengai

டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தன்னுடைய அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியிருந்த கே.எல்.ராகுல், இந்திய அணியின் அடுத்த எதிர்கால பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டார். தன்னுடைய கிளாசிக் ஷாட்களால் இந்திய ரசிகர்களை கவர்ந்த ராகுலுக்கு பாதகமாக அமைந்தது அறுவை சிகிச்சை மற்றும் காயங்கள். அடிக்கடி ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைகள் செய்யுமளவு நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து காயம் அடைவதும் சிகிச்சை மேற்கொள்வதுமாய் இருந்த அவருக்கு, தன்னுடைய சிறப்பான பேட்டிங் ஃபார்மை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

உலகக்கோப்பை அணியில் எதற்கு அவருக்கு இடம்?

டி20-ல் அதிக சதங்கள், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதங்கள், சிறப்பான ஐபிஎல் தொடர் என தொட்டதெல்லாம் சிறப்பாக இருந்த கேஎல் ராகுலால், காயத்திற்கு பிறகு சிறப்பாக செயல்பட முடியவில்லை. என்னதான் ஃபார்ம் இழந்து சரியாக செயல்பட முடியாமல் போனாலும், ராகுலின் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை வழங்கிக்கொண்டே இருந்தது.

KL Rahul

கேஎல் ராகுலை எந்தளவு நாங்கள் அணிக்குள் வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்ட நினைத்த இந்திய அணி, அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி பேக்கப் செய்தது. அணிக்குள் வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி ஃபார்முக்குள் திரும்ப நினைத்தாலும் மீண்டும் காயம் ஏற்பட்டு ராகுலுக்கு பின்னடைவையே தந்தது. ஒருகட்டத்தில் ரன்களே வராத சூழலும் வந்தது.

அப்போது, ‘எதற்கு இவரையெல்லாம் அணிக்குள் வைத்திருக்கிறீர்கள்’ என சமூக வலைதளங்களில் அதிகமான ட்ரோல்கள் இடம்பெற்றன. 2023 ஐபிஎல் தொடரிலும் சுமாரான பேட்டிங்கையே வெளிப்படுத்தியிருந்த அவருக்கு, ஆர்சிபி அணியுடனான போட்டியின் போது மீண்டும் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. விரைவாக அணிக்குள் திரும்பிவிடுவார் என்று நினைத்தால் இந்த காயமும் அவரை அறுவை சிகிச்சைக்கு இழுத்துச்சென்றது.

KL Rahul

இந்நிலையில் மே மாதத்தில் இருந்து ஓய்வில் இருந்த அவரை சமீபத்தில் இந்திய அணியின் உலகக்கோப்பை ஸ்குவாடில் இணைத்தது இந்திய நிர்வாகம். கேஎல் ராகுலின் சேர்ப்பு மீண்டும் ஒரு விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஃபார்மிலும் இல்லை, 4 மாதங்களாக எந்தவிதமான போட்டியிலும் ஆடவில்லை இவரையெல்லாம் எப்படி உலகக்கோப்பைக்கு அழைத்துச்செல்கிறீர்கள் என பகிரங்க குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தற்போது தன்னுடைய சதத்தால் பதிலளித்துள்ளார் கேஎல் ராகுல்.

விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கேஎல் ராகுல்! கோலியின் சாதனை சமன்!

கேஎல் ராகுலின் மீதிருந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை, நேராக தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக ராகுலை களமிறக்கியது இந்திய அணி. 4 மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய கேஎல் ராகுல், தன்னுடைய கிளாசிக்கான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தி அசத்தினார்.

சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 106 பந்துகளில் 111 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 6வது சதத்தை பதிவு செய்திருக்கும் ராகுல் விமர்சனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய பேட்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார். ஒருவேளை இதையே இவர் இலங்கைக்கு எதிராகவோ இல்லை வங்கதேசத்திற்கு எதிராகவோ கூட அடித்திருந்தால் கூட விமர்சனம் செய்யப்பட்டிருப்பார். ஆனால் உலகத்தின் சிறந்த பவுலிங் அட்டாக்கை வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை பதிவு செய்து அனைவரது வாயையும் அடைத்துள்ளார்.

KL Rahul

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்திருக்கும் கேஎல் ராகுல் குறைவான இன்னிங்ஸ்களில் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை சமன் செய்துள்ளார். 53 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்த விராட் கோலியை கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் ஷிகர் தவான் 48 இன்னிங்ஸ்கள், சவுரவ் கங்குலி மற்றும் நவ்ஜோத் சிங் 52 இன்னிங்ஸ்கள், விராட் கோலி 53 இன்னிங்ஸ்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.